எமது கருத்தை எதிர்த்து அறிக்கை விட்ட ஐவரும், உபவேந்தரின் மோசடிகளுக்குத் துணை போகின்றவர்கள்: தெ.கி. ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

🕔 May 16, 2018

‘தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அண்மையில் நடத்திய ஊடக சந்திப்பு, தனிப்பட்ட சிலரின் நிகழ்ச்சி நிரல்’ எனத் தெரிவித்து அறிவிக்கை வெளியிட்ட ஐந்து நபர்களும், உபவேந்தர் மேற்கொண்ட மோசடியான செயற்பாடுகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள் என்று, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

ஆசிரியர் சங்கத்தின் கடிதத் தலைப்பில் தலைவர் எம். அப்துல் ஜப்பார் கையெழுத்திட்டு அனுப்பி வைத்துள்ள அறிக்கையொன்றிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்த தகவல்களை அடிப்படையாக வைத்து, ‘தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், கபட நாடகமாடுகிறார்: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு’ எனும் தலைப்பில், அன்றைய தினம் செய்தியொன்றினை ‘புதிது’ செய்தித்தளம் வெளியிட்டது.

இந்த நிலையில், குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை மறுக்கும் வகையில், தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஐவர் கையொப்பமிட்டு ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறிக்கையொன்றினை அனுப்பி வைத்தனர்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களை வைத்து, ‘தெ.கி.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு, தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்: ஐவரின் கையொப்பங்களுடன் அறிக்கை வெளியீடு’ எனும் தலைப்பில் ஒரு செய்தியினை ‘புதிது’ வெளியிட்டது.

இவ்வாறானதொரு நிலையிலேயே, தற்போது நிறைவேற்றுக் குழுவினரின் அறிக்கைக்கு மறுப்பறிக்கையொன்றினை ஆசிரியர் சங்கம் அனுப்பி வைத்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் விசேடபொதுக்கூட்டம் 03.05.2018 அன்று கலை கலாச்சார பீடத்தின் கேட்போர் கூடத்தில் 73 அங்கத்தவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது. அக்கூட்டத்தில், ஊடக சந்திப்பு நடத்துதல் உட்பட பின்வரும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

• புதியஉபவேந்தர் நியமனம் தொடர்பில் தென்கிழக்குப் பல்கலைக்கழக
ஆசிரியர் சங்கம் உயரதிகாரிகளைத் தெளிவுபடுத்துதல்.
• சோடிக்கப்பட்ட முறைப்பாடொன்றைச் செய்து, புதியஉபவேந்தர் நியமனம்
தொடர்பில் நிலைமையைச் சீர்குலைத்த ஏ.ஆர்.ஏ. ஜவாஹிர் மீது சட்ட நடவடிக்கை எடுத்தல்
• தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகத்தைச் சார்ந்த ஒருவரையே புதிய உபவேந்தராக வருவதற்கு, தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்
ஆதரவு வழங்குதல்.
• தற்போதைய உபவேந்தரும் புதிய உபவேந்தருக்கான விண்ணப்பத்தினைச்
சமர்ப்பித்துள்ளதனால், அவரோ அல்லது உபவேந்தர் பதவிக்கு
விண்ணப்பித்துள்ள வேறு எவரோ, பதில் உபவேந்தராக நியமிக்கப்படக்
கூடாது.
• தற்போதைய உபவேந்தர் களனி பல்கலைக் கழகத்தினை சேர்ந்தவர்
என்பதனால் இவரைப்பற்றிய குற்றச்சாட்டுக்களை களனி பல்கலைக்கழக நிருவாகத்திற்கும் அறிவிப்பது.

மேற்கூறப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக, நேற்று முன்தினம் 14ஆம் திகதி ‘புதிது’ இணையத்தளத்தில் ‘தெ.கி. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தியும், இன்று 16ஆம் திகதி தினகரன் நாளிதழில் வெளிவந்துள்ள ‘தெ.கி. பல்கலை ஆசிரியர் சங்கத் தலைவரின் கருத்திற்கு நிறைவேற்றுக் குழு எதிர்ப்பு’ என்ற செய்தியும் எங்களது 03ஆம் திகதிய விசேடபொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிரானதாகும்.

எனவே, மேற்படி கருத்துக்கு ஆதாரவாக கையொப்பமிட்ட நிறைவேற்று குழு உறுப்பினர்களுக்கு எதிராக, ஆசிரியர் சங்கத்தின் யாப்பின் 20வது ஷரத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இந்தகைய கையொப்பங்களையிட்ட ஐந்து உறுப்பினர்களும், ஆசிரியர் சங்கத்தின் ஊடக சந்திப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக, உபவேந்தருடன் இணைந்து செயற்பட்டவர்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர்பான செய்திகள்: 

01) தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், கபட நாடகமாடுகிறார்: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

02) தெ.கி.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு, தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்: ஐவரின் கையொப்பங்களுடன் அறிக்கை வெளியீடு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்