ஆப்கானில் இரட்டை குண்டு வெடிப்பு; ஊடகவியலாளர்கள் பலர் பலி

🕔 April 30, 2018

ப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இன்று திங்கட்கிழமை நடந்த இரட்டைக் குண்டுத் தாக்குதல்களில் ஆகக்குறைந்தது 29 பேர் பலியாகினர்.

முதல் குண்டு வெடித்து 15 நிமிடங்களின் பின்னர், ஊடகவியலாளர் போல் வேடமிட்டு வந்த தாக்குதல்தாரி இரண்டாவது குண்டினை வெடிக்கச் செய்திருந்தார்.

இதில், ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞரும், அங்கு செய்தி சேகரிக்க சென்ற பல ஊடகவியலாளர்களும் உயிரிழந்துள்ளனர்.

காபுலின் ஷாஷ்தரக் மாவட்டத்தில் திங்கட்கிழமை காலை 8.00 மணியளில் முதல் குண்டு வெடித்துள்ளது.

முதல் வெடிப்புக்கு 15 நிமிடங்களுக்கு பின்னர், பொதுமக்களும் செய்தியாளர்களும் அங்கு திரண்டபோது இரண்டாவது குண்டு வெடித்தது.

குண்டு வெடித்த பகுதியில் அமெரிக்க தூதுவராலயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர்களை இலக்காக வைத்தே இரண்டாவது குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்களுக்கு எந்த குழுவும் இன்னும் பொறுப்பேற்கவில்லை.

Comments