ஏறாவூர் நகர சபையில் ஹாபிஸ் நசீரின் அரசியல் வியாபாரம்; எதிரணி உறுப்பினர்களை விலைபேசிய ‘டீல்’ அம்பலம்

🕔 April 8, 2018

– மப்றூக் –

றாவூர் நகர சபையை கைப்பற்றுவதற்காக, முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவர்களில் ஒருவரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர், அவரின் ஆட்கள் மூலம் எதிரணி உறுப்பினர்களை விலை பேசியமை அம்பலமாகியுள்ளது.

ஏறாவூர் நகர நகர சபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது – ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்திலும், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும் போட்டியிட்டது.

கதைச் சுருக்கம்

ஏறாவூரைச் சேர்ந்த – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீரும், அதே ஊரைச் சேர்ந்த மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். என்றாலும், மிகமோசமான பகைமை அவர்களுக்குள் நிலவுகின்றமையினால், ஏறாவூர் நகர சபைக்கா தேர்தலில்அவர்கள் இருவரும் தமது ஆட்களை ஒரே சின்னத்தில் களமிறக்க விரும்பவில்லை.

அதனால், யானைச் சின்னத்தில் ஹாபிஸ் நசீரும், தராசு சின்னத்தில் அலிசாஹிர் மௌலானாவும் தமது அணியினைரை ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலில் களமிறக்கினர்.

தேர்தல் முடிவு

இந்த நிலையில், 17 ஆசனங்களைக் கொண்ட ஏறாவூர் நகர சபையில் 05 ஆசனங்களை தராசு சின்னத்தில் போட்டியிட்ட அலிசாஹிர் மௌலானா அணி பெற்றுக் கொண்டது. யானைச் சின்னத்தில் போட்டியிட்ட ஹாபிஸ் நசீரின் தரப்பு 04 ஆசனங்களைப் பெற்றது.

மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 03 ஆசனங்களையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு 02 ஆசனங்களையும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஐக்கிய சமாதான கூட்டமைப்பு மற்றும் ஒட்டகச் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை அணி ஆகியவை தலா ஒவ்வொரு ஆசனத்தைப் பெற்றுக் கொண்டன.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், ஏறாவூர் நகர சபையை யார் கைப்பற்றுவது என்கிற போட்டி, ஹாபிஸ் நசீருக்கும் அலிசாஹிர் மௌலானாவுக்கும் இடையில் எழுந்தது.

வியாபாரம்

இதன்போது, ஹாபிஸ் நசீர் அணியினர் ஏனைய உறுப்பினர்களுக்கு பணம் மற்றும் பதவிகளை வழங்குவதாகக் கூறி, பல்வேறு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது.

அந்தவகையில், ஹாபிஸ் நசீருக்கு நெருக்கமானவரும் ஏறாவூர் பிரதேச முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத் தலைவருமான முகம்மட் வஹாப் என்பவர், அலிசாஹிர் மௌலானா அணி உறுப்பினரான றியால் என்பவருடன் ‘டீல்’ பேசிய தெலைபேசி உரையாடலொன்று அம்பலமாகியுள்ளது.

ஏறாவூர் நகர சபையில் ஹாபிஸ் நசீர் தரப்பு ஆட்சியமைப்பதற்கு றியால் ஆதரவு வழங்கினால், அச்சபையின் பிரதி தவிசாளர் பதவியை வழங்குவதோடு, 50 லட்சம் ரூபாய் பணம் வழங்குவதற்கும் ஹாபிஸ் நசீர் தரப்பினர் தயாராக இருந்தமை, குறித்த தொலைபேசி உரையாடல் மூலம் தெரிய வந்துள்ளது.

வென்றார் ஹாபிஸ்

இந்த நிலையில், அலிசாஹிர் மௌலான தரப்பை விடவும் 01 உறுப்பினரை குறைவாகப் பெற்ற ஹாபிஸ் நசீர் அணி, ஏறாவூர் நகர சபையைக் கைப்பற்றிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், ஹாபிஸ் நசீர் தரப்பு ‘டீல்’ பேசிய, அலிசாஹிர் மௌலானா தரப்பைச் சேர்ந்த றியால், ஹாபிஸ் நசீர் தரப்புக்கு ஆதரவளிக்கவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ஏறாவூர் நகர சபையைக் கைப்பற்றுவதில் பதாளத்தைத் தாண்டியும் பணம் பாய்ந்திருக்கின்றது என்பதை, றியாலுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடல் மூலம் பொதுமக்கள் புரிந்து கொள்ள முடியும்.

வீடியோ

Comments