அக்கரைப்பற்று புதுப் பள்ளிவாசல் அறை உடைக்கப்பட்டு, சி.சி.ரி.வி. ஒளிப்பதிவு சாதனம் திருட்டு

🕔 March 16, 2018

– மப்றூக் –

க்கரைப்பற்று புதுப் பள்ளிவாசலின் காரியாலய அறை உடைக்கப்பட்டு, அங்கிருந்த சி.சி.ரி.வி. கமராக்களின் காட்சிகள் பதிவு செய்யப்படும் சாதனம் திருடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில், புதுப் பள்ளிவாசலின் செயலாளர் ஆதம்லெப்பை அப்துல் லத்தீப் என்பவர் முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்று முன்தினம் புதன்கிழமை நள்ளிரவு பள்ளிவாசலின் அலுவலகத்தில் குறித்த ஒளிப்பதிவு சாதனம் காணப்பட்டதாகவும், மறுநாள் வியாழக்கிழமை அதிகாலை வேளையில், பள்ளிவாசல் அலுவலக அறையின் ஜன்னல் கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில், அங்கிருந்த சி.சி.ரி.வி. கமராக்களின் காட்சிகளைப் பதிவு செய்யும் சாதனம் திருட்டுப் போயிருந்ததாகவும், பள்ளிவாசலின் செயலாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

குறித்த ஒளிப்பதிவு சாதனம் திருடப்படுவதற்கு முந்தைய நாள், பள்ளிவாசலுக்கு அருகாமையில் ஒரு குழுவினர் – டயர்கள் மற்றும் பதாகைகளை வீதியில் எரித்து ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.

முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு எதிராக, அவரின் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினரே, அந்த டயர் எரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments