மு.காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் படுகொலை செய்யப்பட்டார்; ஹக்கீம் முன்னிலையில் வேட்பாளரொருவர் பாலமுனையில் தெரிவிப்பு

🕔 January 15, 2018

– மப்றூக் –

முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார் என, அட்டளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மௌலவி எம்.எஸ். அம்ஜத் தெரிவித்தார்.

பாலமுனை பிரதேசத்தில் நேற்றிரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், அந்த மேடையில் அமர்ந்திருந்த போது, அவருக்கு முன்பாக, வேட்பாளர் அம்ஜத் இந்த தகவலை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது பேரினவாத சக்திகள் அல்லது பெரிய கட்சிகள், இந்த படுகொலையை செய்திருக்கலாம் எனவும் அவர் இதன்போது அவர் கூறினார்.

முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபத் தலைவர் அஷ்ரப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என, தான் நம்புவதாக முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தற்போதைய தவிசாளருமான பசீர் சேகுதாவூத் மிக நீண்ட காலமாக கூறி வரும் நிலையிலேயே, முஸ்லிம் காங்கிரசின் வேட்பாளர்களில் ஒருவர், ரஊப் ஹக்கீம் முன்னிலையில் இவ்வாறானதொரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

மு.காங்கிரசின் ஸ்தாபக தலைவர் அஷ்ரப்பின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்காக, அப்போது நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினை வழங்குமாறு கோரி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக பசீர் சேகுதாவூத் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

எவ்வாறாயினும், அஷ்ரப்பின் மரணம் படுகொலையாக இருக்கலாம் என்கிற சந்தேகம் தொடர்பில் ஆராயும் பொருட்டு, அந்தக் கட்சியின் தற்போதைய தலைவர் ரஊப் ஹக்கீம், எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்கிற விமர்சனங்களும் பரவலாக உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்