அக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்

🕔 October 28, 2017

– ஆசிரியர் கருத்து –

பொத்துவில் உப கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றிய 39 ஆசிரியர்களை அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்தமையினைத் தொடர்ந்து, இப் பிரதேசங்களில் பாரிய சர்ச்சைகள் தோன்றியுள்ளன.

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மௌலவி ஏ.எல். காசிம், திடீரென இடமாற்றம் பெற்றுச் செல்லும் போது, பொத்துவில் பிரதேச பாடசாலைகளில் கடமையாற்றிய 39 ஆசிரியர்களை அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்கு இடமாற்றியிருந்தார்.

மேற்படி ஆசிரியர்களுக்கு இடம்மாற்றம் வழங்குவதற்கு பொத்துவில் பாடசாலைகளின் அதிபர்கள் கூட்டத்தில் கடந்த ஒகஸ்ட் மாதமளவில் சம்மதம் வழங்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால், குறித்த இடமாற்றங்கள் செப்டம்பர் நடுப்பகுதியில் வழங்கப்பட்டிருந்தன.

இதேவேளை, இடமாற்றம் வழங்கப்பட்டவர்கள் அனைவரும் பொத்துவில் பிரதேசப் பாடசாலைகளில் 05 வருடங்கள் பணியாற்றிய வெளி ஊர்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் கவனித்துக்குரியது. இவர்களில் அதிகமானோர் பெண்களாவர்.

ஆயினும், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்த ஏ.எல். காசிம், இந்த இடமாற்றத்தில் சில தவறுகளை இழைத்திருப்பதாகக் கூறப்படுகிறது

  • வருட இறுதியில் பெருந்தொகையான ஆசிரியர்களை திடீரென இடம் மாற்றியமை தவறாகும். இதனால், ஆசியர்கள் கற்பித்த வகுப்பு மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும்.
  • 39 ஆசிரியர்களை பொத்துவிலில் இருந்து இடம்மாற்றம் செய்யும் போது, அவர்களுக்கான பதிலீட்டு ஆசிரியர்களை பொத்துவிலுக்கு வழங்கவில்லை.

என்பவைதான் அந்தக் குற்றச்சாட்டுகளாகும்.

எவ்வாறாயினும், பொத்துவிலில் இருந்து இடம்மாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும், புதிய பாடசாலைகளில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக புதிதாய் பதியேற்றுள்ள ஏ.எம். அஹமட் லெப்பை, பொத்துவிலில் இருந்து வந்த ஆசிரியர்கள் அனைவரினதும் இடமாற்றங்களை ரத்துச் செய்வதாக அறிவித்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இவ்வாறு ரத்துச் செய்ய முடியுமா என்கிற கேள்வியும் இங்கு உள்ளது.

அதாவது, இடமாற்றம் பெற்று வந்து, புதிய பாடசாலையில் கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், அந்த ஆசிரியரின் இடமாற்றத்தினை ரத்துச் செய்ய முடியாது என்கிற வாதமொன்று உள்ளது.

தேவையானால், இடம்மாற்றம் பெற்று வந்து புதிய பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் மீளவும் இடமாற்றங்களை வழங்குவதன் மூலமாகவே, அவர்களை பொத்துவிலுக்கு அனுப்பி வைக்க முடியும் எனவும் வாதிடப்படுகிறது.

எனவே, இந்த விவகாரத்தில் மிகச் சரியான நடைமுறைகள் பின்பற்றப்படுதல் வேண்டும்.

இதேவேளை, பொத்துவில் பிரதேசத்தில் 05 வருடங்கள் தொடர்ச்சியாகக் கடமையாற்றிய ஆசிரியர்களை, குறிப்பாக பெண் ஆசிரியர்களை இவ்வாறு பந்தாடுகின்றமை கருணையற்ற செயற்பாடாகும்.

இன்னொருபுறம், இந்த விடயத்தில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி. நிசாம், நடுநிலையாகச் செயற்படவில்லை என்கிற குற்றச்சாட்டொன்றும் அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலை சமூகத்தவர்களிடம் உள்ளது. எனவே, இந்தக் குற்றச்சாட்டினை – களைவதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை மாகாணப் பணிப்பாளர் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

மேற்படி ஆசிரியர் விவகாரத்தினால் இறுதியில் பாதிக்கப்படப் போவது, நமது சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள்தான் என்பதை, அனைத்துத் தரப்பினரும் மனங்கொள்ள வேண்டும்.

இத்தனைக்குப் பிறகும், இந்தப் பிரச்சினையில் தமது காய்களை நகர்த்தி அரசியல் செய்வதற்கு யாராவது அதிகாரிகள் முயற்சித்தால், ஒரு பொறுப்பு வாய்ந்த ஊடகம் எனும் வகையில் – அவர்களை நிச்சயமாக நாம் அம்பலப்படுத்துவோம் என்பதையும் இந்த இடத்தில் கூறிவைக்க விரும்புகிறோம்.

Comments