ஜனாஸாவில் கலந்து கொள்ளச் சென்ற ஹக்கீம், பொன்னாடை போர்த்திக் கொண்ட புதினம்: எழுகிறது விமர்சனம்

🕔 June 3, 2017

– முன்ஸிப் அஹமட் –

விக்கோ அப்துல் ரகுமானின் ஜனாஸாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், அந்தப் பயணத்தில் பொன்னாடை போர்த்திக் கொண்ட செயற்பாடு குறித்தும், அவற்றினைப் படங்களாக வெளியிட்டமை தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

கவிக்கோ அப்துல் ரகுமானின் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொள்வதற்காக, தமிழகம் சென்றிருந்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், அதனைப் படமாக எடுத்துக் கொண்டதோடு, அதே பயணத்தில் தனக்கு பொன்னாடை போர்த்தப்பட்டதையும் படமாக எடுத்து, தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது தவிர, கவிக்கோ அப்துல் ரகுமானின் ஜனாஸாவை, மு.கா. தலைவர் பார்வையிடும் படத்தினையும், அதே பயணத்தில் மு.கா. தலைவர் பொன்னாடை போர்த்திக் கொண்ட படத்தினையும், மு.கா. தலைவர் ஹக்கீம் சார்பான இணையத்தளமொன்று ‘கவிக்கோ அப்துல் ரஹ்மானின் ஜனாஸா நல்லடக்கத்தில் மு.கா தலைவர் பங்கேற்பு’ எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளது.

இவற்றினைத் தொடர்ந்தே மு.கா. தலைவரின் விளம்பர மோகம் தொடர்பில் பாரிய விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

கவிக்கோவின் ஜனாஸாவில் கலந்து கொண்ட படத்தினையும், தனக்கு பொன்னாடை போர்த்தப்பட்ட படத்தினையும் ஒன்றாக வெளியிட்டுள்ளமை மூலம் மு.கா. தலைவர், தன்னை யார் என இனங்காட்டி விட்டார் என்று, சமூக வலைத்தளங்களில் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

கவிக்கோ அப்துல்ரகுமானின் ஜனாஸா நல்லடக்கம் இன்று சனிக்கிழமை பிற்பகல், தமிழகம் திருவான்மியூர் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்