அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள், பாலமுனையில் வீதி மறியல் போராட்டம்

🕔 March 14, 2017

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாட் ஏ காதர் –

ம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து, பாலமுனையில் அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியினை மறித்து, இன்று காலை போராட்ட  நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர்.

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் வந்து செல்லும் நுழை வாயிலை மூடியுள்ள மணலை அகற்றுமாறு, மிக நீண்டகாலமாக, தாம் விடுத்து வரும் கோரிக்கை தொடர்பில், உரிய நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படாமையினைக் கண்டித்தே, இவர்கள் இந்த வீதி மறியல் போராட்டத்தை மேற்கொண்டார்கள்.

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தினுள் படகுகள் வந்து செல்லும் மார்க்கம் மணலால் மூடப்பட்டுள்ளமை காரணமாக, துறைமுகத்தினுள் தரித்து நிற்கும் படகுகள், தொழில் நிமித்தம் வெளியேறிச் செல்ல முடியாத நிலைவரமொன்று ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, போக்குவரத்து மார்க்கத்தினை மூடியுள்ள மணலினை தோண்டும் நடவடிக்கைகள், அங்குள்ள படகுகளின் உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்டபோதும் அந்த நடவடிக்கைள் வெற்றியளிக்கவில்லை.

அம்பாறை மாவட்டத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் பல நூற்றுக்கணக்கான படகுகள், ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் தரித்து நிற்பது வழமையாகும். அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த படகுகள் மட்டுமன்றி, மாத்தறை, நீர்கொழும்பு மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த படகுகளும் – ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் தரித்து நின்று தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், துறைமுகத்திலிருந்து கடலினுள் சென்று வரக்கூடிய போக்குவரத்து மார்க்கம் – கடந்த பல மாதங்களாக மணலினால் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, துறைமுகத்தினுள் தரித்து நிற்கும் படகுகள் அங்கிருந்து வெளியேறி கடலுக்குள் செல்ல முடியாததொரு நிலைவரம் ஏற்பட்டுள்ளது.

இதனால், அங்குள்ள படகு உரியமையாளர்கள் தொழிலின்றி பாரிய நஷ்டத்தினை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, தமக்கு ஏற்படுள்ள இந்த நிலைகுறித்து உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தும், பயன்;தரும் நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் படகுகளின் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம், ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் படகுப் பாதையினை மூடியுள்ள மண்ணை அகற்றும் பொருட்டு, இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான சயுறு எனும் கப்பல், ஒலுவில் துறைமுகத்துக்கு வருகை தந்த போதிலும், அந்தக் கப்பல் மூலம் படகுப் பாதையினை மூடியுள்ள மணல் வெற்றிகரமாக அகற்றப்படவில்லை.

இதனையடுத்து சில வாரங்கள் ஒலுவில் துறைமுகத்தில் தரித்திருந்த மேற்படி சயுறு எனும் கப்பல், பின்னர் அங்கிருந்து சென்றது.

இதனால் தொடர்ந்தும் கடற்றொழிலாளர்கள் தமது தொழிலில் ஈடுபட முடியாத நிலைவரம் உருவானது.

தமக்கு ஏற்பட்டுள்ள இந்த அவலம் குறித்து, அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளிடம் கடற்றொழிலாளர்கள் முறையிட்டபோதிலும், அவர்கள் இது தொடர்பில் உரிய தீர்வினைப் பெற்றுத் தரவில்லை என கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்தே, இன்று அவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள், படகு ஒன்றினை பிரதான வீதியினை மறித்து வைத்தனர். இதனால், அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் வாகனப் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

தமது கோரிக்கைள் எழுதப்பட்ட பல்வேறு சுலோகங்களைத் தாங்கிய வண்ணம் நூற்றுக்கணக்கான கடற்றொழிலாளர்கள் இந்த பேராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் ஸ்தலத்துக்கு வருகை தந்து, மறியல் போராட்த்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மறியல் போராட்டம் நடந்த இடத்துக்கு வருகை தந்த அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜிடம், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களைக் கையளித்தனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோருக்கான மகஜர்களின் பிரதிகளை, இதன்போது உதவி பிரதேச செயலாளரிடம் மறியல் போராட்டக்காரர்கள் கையளித்தனர்.

இதனையடுத்து அங்கிருந்து, வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றார்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்