உயர்பீடத்தில் ஓட்டப்படும் ஊமைப் படம்

🕔 January 24, 2017

Hakeem - 098– முன்ஸிப் அஹமட் –

மொழி உரிமைக்காக நடக்கும் போராட்டங்களை அடிக்கடி நாம் காண்பதுண்டு. சிங்கள மொழியில் மட்டும் சுற்று நிருபத்தை அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்று கூறி, தமது அமைச்சுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் பலரை நாம் பார்த்திருக்கிறோம். நமக்குத் தெரியாத மொழியில், நம் முன்னால் ஒருவர் உட்கார்ந்து பேசுவதைக் கேட்பதும், ‘ஊமைப் படம்’ பார்ப்பதும் ஒன்றுதான்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டங்கள் ஆங்கில மொழியில்தான் நடத்தப்படுகின்றன. உயர்பீடத்தில் மொத்தமாக 90 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோருக்கு ஆங்கில மொழி தெரியாது. மற்றையோரில் அரைவாசிப் பேருக்கு ஆங்கில மொழியில் புலமையில்லை. இந்தக் கணக்கின்படி பார்த்தால், உயர்பீடத்திலுள்ள 90 பேரில் 20 தொடக்கம் 25 பேருக்கு உட்பட்டோர்தான் ஆங்கில மொழியில் புலமையுடையோராக இருக்கின்றனர்.

மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் – ஆங்கில மொழியில் நல்ல புலமையுள்ளவர். அதனால், கட்சியின் உயர்பீடக் கூட்டங்களை அவர் ஆங்கிலத்திலேயே நடத்துகின்றார். உயர்பீட உறுப்பினர்கள் தமிழில் கேள்விகள் கேட்டாலும், தலைவர் ஆங்கிலத்தில்தான் பதில் சொல்வார். ஒவ்வொரு உயர்பீடக் கூட்டமும் இப்படித்தான் நடந்து வருகிறது.

உயர்பீடக் கூட்டங்களில் கட்சி தொடர்பான முக்கிய தீர்மானங்களெல்லாம் இப்படித்தான் நிறைவேற்றப்படுகின்றன. குறித்த விடயத்தினை கட்சித் தலைவர் ஹக்கீம் ஆங்கிலத்தில் முன்மொழிவார். பின்னர் அவ்விடயம் தொடர்பில் தலைவர் ஆங்கிலத்தில் விளக்கமளிப்பார். ஆங்கிலம் தெரியாதவர்களும், போதிய புலமையில்லாதவர்களும் – தலைவர் சொல்வதையெல்லாம் ஊமைப் படம் பார்ப்பது போல், பார்த்துக் கொண்டிருப்பார்கள். பிறகு, தான் முன்மொழிந்த விடயத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா என்று தலைவர் கேட்பார். அதையும் ஆங்கிலத்தில்தான் கேட்பார். தலைவரின் ஆங்கிலம் புரிந்த ஒருவர் – அந்த விடயத்தை பிரேரிப்பார், மற்றொரு ஆங்கிலம் தெரிந்த நபர் ஆமோதிப்பார்.

ஆங்கிலம் தெரியாதவர்களும், புரியாதவர்களும் ‘அல்லாஹு அக்பர்’ ஒன்று, கோரசாக கோசமிடுவார்கள். தீர்மானத்தை ஏற்றுக் கொண்டோம் என்று, அதற்கு அர்த்தமாகும். அத்துடன் தீர்மானம் நிறைவேறி விடும்.

தலைவர் என்ன சொன்னார், நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் வழங்கப்பட்ட விளக்கம் என்ன என்பது பற்றி ‘அல்லாஹு அக்பர்’ சொன்ன உயர்பீட உறுப்பினர்களில் கணிசமானோருக்கு எதுவும் தெரியாது. தலைவர் முன்மொழிந்தார் என்பதற்காக, அதனை ஆமோதித்தார்கள். அவ்வளவுதான்.

முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில் அங்கத்துவம் வகிப்போர் அனைவருக்கும் தமிழ் தெரியும். ஆனால், அவர்களில் அதிகமானோருக்கு ஆங்கிலம் தெரியாது. அப்படியென்றால், உயர்பீடக் கூட்டத்தினை தமிழில்தான் நடத்த வேண்டும். அதுதான் நீதி; அதுதான் நியாயம்.

உயர்பீட உறுப்பினர்களில் அதிகமானோருக்கு ஆங்கிலம் தெரியாது என்கிற பலவீனத்தை மு.கா. தலைவர் பயன்படுத்திக் கொள்வதற்காகவே, அவர் ஆங்கிலத்தில்  உயர்பீடக் கூட்டங்களை நடத்தி வருகின்றார். தனக்குத் தேவையான தீர்மானங்களை எதிர்ப்புகளின்றி நிறைவேற்றிக் கொள்வதற்கு, ஆங்கில மொழியிலான உயர்பீடக் கூட்டங்கள் – அவருக்குக் கைகொடுக்கிறது. இறுதியாக நடைபெற்ற கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் உயர்பீடத்துக்கான செயலாளர் ஒருவரைத் தெரிவு செய்தமையினூடாக, செயலாளர் எம்.ரி. ஹசனலியின் அதிகாரங்களைப் பறிப்பதற்கு, ஆங்கிலத்தில் உயர்பீடத்தினை நடத்தும் தந்திரம்தான் – ஹக்கீமுக்குக் கை கொடுத்தது.

எனவே, இனியும் இந்த ஏமாற்று நடவடிக்கைக்கு மு.கா. உயர்பீட உறுப்பினர்கள் பலியாகக் கூடாது. எல்லோருக்கும் தெரிந்த – தமிழ் மொழியில் உயர்பீடக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்படுதல் வேண்டும். அந்தக் கோரிக்கையினை கட்சியின் யாப்பில் ஒரு நிபந்தனையாகச் சேர்க்க வேண்டும். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி நடைபெறும் பேராளர் மாநாட்டினையும், அதற்கு முன்னர் நடைபெறும் கட்டாய உயர்பீடக் கூட்டத்தினையும், குறித்த தீர்மானத்தினை மேற்கொள்வதற்குரிய சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மு.காங்கிரஸ் என்பது சமூகத்தின் அடி மட்டத்திலுள்ள பிரஜைகளும் அரசியல் செய்வதற்குரிய கட்சியாக கட்டமைக்கப்பட்டதாகும். ஆனால், துரதிஷ்டவசமாக இப்போது அந்தக் கட்சியானது, நுனி நாக்கினால் ஆங்கிலம் பேசிக் கொண்டு திரிகின்ற, சூட்டு – சூட்டு மனிதர்களிடம் மாட்டிக் கிடக்கிறது. அதனால், மு.காங்கிரசை மேல் தட்டு வர்கத்தவர்களுக்கு மட்டுமான அரசியல் கட்சியாக மாற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மு.காங்கிரசில் அதிகாரம் மிக்க பதவிகளை வகிப்போரெல்லாம் யார் – யார் என்று பட்டியலிட்டுப் பார்த்தால், இந்த உண்மை புரியும்.

எனவே, மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்களுக்கு அந்தக் கட்சியின் தலைவர், தொடர்ந்தும் ஊமைப் படம் ஓட்டுவதை அனுமதிக்க முடியாது – கூடாது.

ஆங்கிலம் தெரியாதவர்களிலும் புத்திசாலிகள் உள்ளனர் என்பதை, எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள – கட்டாய உயர்பீடக் கூட்டம், மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு ‘அறைந்து’ சொல்ல வேண்டும்.

சொல்லுமா?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்