மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்குவது, நரியிடம் கோழிகளை பொறுப்பளிப்பதற்கு ஒப்பானதாகும்: முஜிபுர் ரஹ்மான்

🕔 July 5, 2015
Mujeebur Rahman - 012னாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவர் சார்ந்த கட்சியில், மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்குவதானது – நரியிடம் கோழிகளை பொறுப்பு கொடுப்பதற்கு ஒப்பானதாகும். இந்த முயற்சியானது பெரும் அழிவையே ஏற்படுத்தும் என –  ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளரும், மேல்மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
புதுக்கடையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், நேற்று சனிக்கிழமயிரவு கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வரலாற்று ரீதியாக தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சஹாக்களும், எப்படியாவது மீண்டும் ஆட்சியை கைப்பற்றி அதிகாரத்துக்கு வருவதற்கே முயற்சிக்கின்றனர். இதற்காக மாற்று வழிகளிலும் சதித் திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

கடந்த 10 வருட மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள், ஜனநாயக விரோத செயல்கள் என்பன மக்களுக்கு ஞாபகம் இருக்கும். அத்துடன் பல கோடிக்கணக்கான அரச சொத்துக்களும் மக்களின் காணிகளும் சூறையாடப்பட்டுள்ளன. மேலும், சிறுபான்மையின மக்கள் நசுக்கப்பட்டு இனவாதிகளுக்கு களமமைத்துக் கொடுக்கப்பட்டதும் மஹிந்த ராஜபக்ஷசின் ஆட்சிக் காலத்திலாகும் என மேல் மாகாண சபை உறுப்பினர் குற்றம் சுமத்தினார்.

இதனை கருத்திற்கொண்டு, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் – மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பி ஓய்வெடுத்துக்கொள்ளச் சொன்னார்கள். ஆனால் அவருக்கு இன்னும் பதவி ஆசை தீர்ந்தபாடில்லை.

இன்று பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கானமுயற்சிகளில் இறங்கியிருக்கின்றார். இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளிக்கக் கூடாது. மஹிந்த ராஜபக்ஷவை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே, மைத்திரிபால சிறிசேனவிற்கு மக்கள் வாக்களித்தனர். மஹிந்தவின் ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியையே கடந்த ஜனாதிபதி தேர்தல் உணர்த்தியுள்ளது என்பதையும், இதன்மூலமே – மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார் என்பதையும் அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.

சுதந்திர கட்சியின் தலைவராவதற்கு மைத்திரிபால சிறிசேனவிற்கு மக்கள் வாக்களிக்கவில்லை. ஊழல், மோசடியற்ற நல்லாட்சியொன்று ஏற்பட வேண்டும் என்பதற்காகவும், சிறுபான்மை இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, இன ஒற்றுமை பேணப்பட வேண்டும் என்ற நல்ல பல காரணங்களுக்குமாகவுமே – மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்கள் ஆணையை வழங்கி ஜனாதிபதியாக்கினர் எனவும் அவர் தெரிவித்தார்.

நாள்தோறும் பன்சலைகளுக்கு சென்று, அங்கு இனவாதம் பேசி அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் மஹிந்த ராஜபக்ஷ – கடந்த காலங்களில் மேற்கொண்ட தவறுகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே அதிகாரத்துக்கு வர முற்படுகின்றார். மைத்திரிபால சிறிசேன, அவரது கட்சியில் மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்குவதானது – நரியிடம் கோழிகளை பொறுப்பு கொடுப்பதற்கு ஒப்பானதாகும்.  இவ்வாறு வேட்பு மனு வழங்கப்படுமானால்,  62 இலட்சம் மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்யும் துரோகமாக அமைந்து விடும் என, மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ராஹ்மான் குறிப்பிட்டார்.

எனவே, மைத்திரிபால சிறிசேன – மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்க வேண்டும். தினேஷ் குணவர்தன, விமல்வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்பன்பில உள்ளிட்ட இனவாத போக்குடைய அரசியல்வாதிகளின் எதிர்ப்பார்புகளை தோற்கடிக்க வேண்டும். இவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்வதற்கே –  இவ்வாறு மஹிந்தவை களமிறக்க வேண்டும் என சுதந்திர கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துகின்றனர். ஆகவே, ஊழல்வாதிகளை காப்பாற்றாமல், நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஜனதிபதியிடம் வேண்டிக்கொள்கிறோம் என முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்