கிழக்கின் அடுத்த முதலமைச்சரும், நிராகரிக்க முடியாத அதிசயங்களும்

🕔 December 29, 2016

article-basheer-0222– பசீர் சேகுதாவூத் (தவிசாளர்: மு.காங்கிரஸ்) –

கிழக்கு மாகாணத்தின் ஆட்சிக் காலம் முடிவுற இன்னும் அரை வருடமே எச்சியுள்ளது. தனி கிழக்கு மாகாணத்துக்கு இரண்டு தேர்தல்கள் நடந்தேறிவிட்டன. மூன்றாவது தேர்தல் நெருங்கி வருகிறது.

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது தேர்தலில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையைப் பெற்ற கூட்டு முன்னணி ஆட்சியமைத்த போது, அன்றைய மத்திய அரசாங்கத்தின் ஆசியுடன் சிவநேசத்துரை சந்திரகாந்தன் என்ற தமிழர் முதலமைச்சரானார்.

இரண்டாவது தேர்தல் 2012 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் கூட்டு முன்னணி பெரும்பான்மையைப் பெற்ற போதும், தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனித்துப் போட்டியிட்டு 07 உறுப்பினர்களைப் பெற்றிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கிய நிபந்தனையுடனான ஆதரவினால் – கூட்டு முன்னணி ஆட்சி பீடம் ஏறியது. இவ்வாட்சியின் முதலமைச்சராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நஜீப் அப்துல் மஜீத் என்ற முஸ்லிம் ஒருவர், முஸ்லிம் காங்கிரசின் ஒப்புதலுடன் முதலமைச்சரானார். மு. காங்கிரசின் நிபந்தனைக்கமைய அவருடைய இரண்டரை வருட பதவிக் காலம் 2015 ஜனவரியோடு முடிவுக்கு வந்தபோது, நஜீப் ராஜினாமாச் செய்தார். அவரின் இடத்துக்கு ஒப்பந்தத்துக்கு அமைவாக முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த செய்னுலாப்தீன் முஹம்மது நஸீர் என்ற முஸ்லிம், தலைவர் றவூப் ஹக்கீமின் சிபாரிசுக்கு அமைய முதலமைச்சரானார்.

ஆக,முதலாவது தடைவை ஒரு தமிழரும், இரண்டாவது தடவை இரண்டு முஸ்லிம்களும் முதலமைச்சரானார்கள். அவர்கள் எந்தக்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்த போதும், மத்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் இரு இனத்தைச் சேர்ந்தவர்களும் முதலமைச்சர் பதவியினை வகித்தனர். மேற்படி முதலமைச்சர்களின் தெரிவுகளில், தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களின் சுயாதீன அரசியல் விருப்பு பிரதிபலித்திருந்தது என்று சொல்ல முடியாது. மத்திய அரசாங்கத்தின் அனுசரணை இருந்தது என்பதுதான் உண்மையாகும்.

ஆனால், வடமாகாண முதலமைச்சராக சீ.வி. விக்னேஸ்வரனைத் தெரிவு செய்ததில் வடபுலத்து தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஆணை இருந்தது. வடக்கு முதலமைச்சராக விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் சாதகமாக அமைந்தன.
வடக்கில் தமிழினம் மிகப் பெரும்பான்மையாக வாழ்கின்றமை.
செல்வாக்கு மிக்க தனிப்பெரும் கட்சியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு திகழ்வது.
விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி வெளிப்படையாக
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆணை கோரியமை.
பதிவு செய்யப்படாவிட்டாலும், தமிழ் கட்சிகளில் அதிகமானவை கூட்டு முன்னணியாக அடையாளம் காட்டியமை.
 அதிக விருப்பு வாக்குகளை விக்னேஸ்வரன் பெற்றமை.
சாதகங்களில் சிலவாகும்.

இவ்வகை சாதகத் தன்மைகளில் அதிகமானவை, கிழக்கு மாகாணத்தில் இல்லை.கிழக்கில் அரசியல் போட்டித் தன்மையுள்ள, அதே நேரம் கிட்டத்தட்ட சம பலமுள்ள மூன்று இனங்கள் வாழ்கின்றன. தனித்து நின்று ஆட்சியமைக்க முடியாவிட்டாலும், முதலமைச்சரைப் பெற்றுக் கொள்ளும் பெரும்பான்மையானது, தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களுக்கே உள்ளது.

தனித்து அதிக ஆசனங்களைப் பெறும் வாய்ப்பு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், முஸ்லிம் கூட்டமைப்புக்குமே (அப்டி ஒன்று உருவானால்) இருக்கும்.

இருப்பினும், தமிழ் மக்களுக்குள் அதிக செல்வாக்குள்ள ஒரு தமிழ்க் கட்சியும், சிங்கள மக்களுக்குள் 06 அல்லது 07 ஆசனங்களைப் பெறும் தகுதியுள்ள பெரும்பான்மையினக் கட்சியொன்றும் கூட்டிணைந்தால், கிழக்கில் தமிழ் – சிங்கள கூட்டாட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. இதன்போது, தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கும் தமிழர் ஒருவர் முதலமைச்சராகவும், இரண்டு முக்கிய அமைச்சர்களாக சிங்களவர்களும் இடம்பெற சாத்தியம் அதிகமாகும். இதன்போது, இவ்விரண்டு கட்சிகளில் ஒன்றிலிருந்து முஸ்லிம் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படுவார். இந்தக் கூட்டணியின் பங்காளியாக மத்திய அரசாங்கத்தில் அமர்ந்திருக்கும் பெரிய கட்சி  இருந்தால், கடந்த இரண்டு முறையும் மாகாண அரசாங்கள் எதிர்நோக்கிய ‘மத்தியில் இருந்து வரும் கட்டுப்பாடு’களை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும்.

மேற்படி கூட்டணி ஏற்படுமாயின், கிழக்கு முஸ்லிம்கள் தங்களது அரசியல் அந்தஸ்த்தை இழக்கும் அபாயம் உள்ளது. மாத்திரமல்லாமல், ஒரு தனித்துவ இனம் என்ற அடிப்படையில் எதிர்பாராத நெருக்கடிகளையும் சந்திக்க நேரும்.

மறுபுறத்தில், முஸ்லிம் மக்களுக்குள் அதிக செல்வாக்குள்ள கட்சிகூட, இன்னொரு பெரும்பான்மைக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து, கிழக்கில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு மிகவும் அரிதாகவே இக்கும். ஆட்சியமைப்பதற்கு ஆகக்குறைந்தது 19 ஆசனங்கள் தேவையாகும். முஸ்லிம் காங்கிரசும் ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டிணைந்து 2008 தேர்தலில் பெற்ற ஆசனங்கள் 15 ஆகும். இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவில்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் தனித்து நின்று பெற்றுக் கொண்ட அதிக தொகை ஆசனங்கள் 2012 தேர்தலில் 07ஆகும். எனவே, பெரிய சிங்களக் கட்சிகள் இரண்டில் எதுவும் முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைக்கத் தேவையான மிகுதி 12 ஆசனங்களைப் பெறமாட்டாது. முஸ்லிம் கூட்டமைப்பு தேர்தலுக்கு முன்னாகவோ, பின்னாகவோ உருவானால் மாத்திரமே முஸ்லிம் – சிங்களக் கூட்டு, கிழக்கில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு உருவாகும். இந்தக் கூட்டணியும் சுயாதீனத்தை இழந்து, மத்திய அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்டுச் செயற்பட வேண்டிய துரதிஷ்ட நிலையிலேயே இருக்கும்.

மேலும், தமிழ் – சிங்களக் கூட்டாட்சியில் முஸ்லிம் சமூகத்துக்கு நிகழும் இனத்துவ அந்தஸ்து இழப்பும் நெருக்கடியும், முஸ்லிம் – சிங்களக் கூட்டாட்சியினால் தமிழினத்துக்கு ஏற்படும்.

தமிழ் – சிங்களக் கூட்டோ அல்லது முஸ்லிம் – சிங்களக் கூட்டோ ஏற்படுவது கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ ஆரோக்கிமானதல்ல. இது அனுகூலங்கள் எதனையும் இரு சிறுபான்மையினருக்கு ஏற்படுத்தப் போவதில்லை. இந்த நிலைமை கிழக்கு வாழ் சிங்களவர்களுக்கே பேரம் பேசும் சக்தியை வழங்கும். தமிழ் – முஸ்லிம் கூட்டாட்சியே ஆரோக்கியமான அரசியல் நகர்வாக அமையும். இவ்வாட்சியில் சிங்களவர்கள் உட்பட எவருக்கும் அநீதி இழைக்கும் ஏது நிலைகள் இல்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில், 2012 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில், 2015 ஆம் ஆண்டு முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரசின் கைக்கு மாறியது. ஆயினும், இதற்கு கூட்டணியில் பங்காளிகளாக இருந்த தேசிய காங்கிரசும், அகில இலங்கை மக்கள் காங்கிரசும் ஆதரவளிக்கவில்லை. அவ்வேளை முஸ்லிம் காங்கிரசுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத்தான் கை கொடுத்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களைக் கொண்டிருந்த பெரிய சிறுபான்மைக் கட்சியாக இருந்தது. காங்கிரசுக்கு 07 ஆசனங்களே இருந்தன. ஆயினும் தனது பெரும்பான்மை கௌரவத்தைக் கை விட்டு, தமிழர் தனித்துவக் கட்சி – முஸ்லிம் தனித்துவக் கட்சிக்குக் கை கொடுத்தமையானது ஒரு வரலாற்றுத் திருப்பமாகும்.

இந்தத் திருப்பத்தையும், சிறுபான்மையினருக்கு இடையிலான எதிர்கால பிராந்திய அதிகாரப் பங்கீட்டின் அவசியத்தையும் கருத்தில் கொண்டு,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுக்கும் அன்று ஒரு மடலை எழுதினேன். பிராந்தியத்தில் தமிழ் முஸ்லிம் உறவை வலுப்படுத்தும் நோக்கமும், எப்போதும் மத்தியில் அதிகாரத்தை சுகிர்க்கும் சிங்களத் தரப்பு – கிழக்கில் பேரம் பேசும் சக்தியைக் கொண்டிருக்குமாயின், இரு சிறுபான்மையினருக்கும் இடையில் தீராப் பகையை பேணும் உத்திகளை அத்தரப்பு கடைப்பிடிக்கும் என்ற அச்சமும், மேற்படி கடிதத்தை நான் எழுதுவதற்குக் காரணங்களாக இருந்தன.

அக்கடிதத்தில், எஞ்சியிருக்கும் முதலைமைச்சருக்கான பதவிக் காலத்தை சரி சமமாகப் பிரித்து, முஸ்லிம் காங்கிரஸும்  த.தே.கூட்டமைப்பும் தலா ஒண்ணரை வருடங்கள் பங்கிட்டுக் கொள்ளுமாறு வினயமாக வேண்டுகோள் விடுத்திருத்தேன். துரதிஷ்டவசமாக, மு.கா இந்த ஆலோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை. இது தொடர்பாக சுமந்திரனும், தேசிய நல்லாட்சிக்கான இயக்கத்தின் தவிசாளர் அப்துல் றகுமானும் என்னோடு பேசினர். முஸ்லிம் காங்கிரசின் தவிசாளராக நான் இருந்த போதும், தீர்மானிக்கும் அதிகாரம் தலைவர் வசம் மட்டுமே இருந்ததால் கையறு நிலையில் இருந்தேன்.

முதலமைச்சர் பதவியின் ஒரு தவணைக் காலத்தை, தமிழரும் முஸ்லிம்களும் இரண்டாகப் பிரித்துப் பகிர்ந்து கொள்ளும் அரசியல் கலாச்சாரத்தை அன்று அறிமுகப்படுத்தி இருந்தால், தமிழரையும் முஸ்லிம்களையும் எந்த சக்தியாலும் பிரித்தாள முடியாது போயிருக்கும். மட்டுமன்றி அரைவாசிக் காலத்துக்கு முதலமைச்சராக இருக்கும் முஸ்லிம் நபரும், அவரின் கட்சியும் தமிழருக்கு சமத்துவமான பங்கை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும். அவ்வாறே மற்ற அரைவாசிக் காலத்துக்கு முதலமைச்சராக இருக்கும் தமிழ் நபரும் அவர் சார்ந்த கட்சியும், முஸ்லிம்களுக்கு சமத்துவமான பங்கை வழங்க வேண்டிய கடமையையும் கொண்டிருப்பர். இந்நிலமை இரு இனங்களுக்கிடையிலும் சமமான பேரம்பேசும் சக்தியை நிலவச் செய்திருக்கும். ஆதலால் எவரும் எத்தரப்புக்கும் அநீதி இழைக்க முடியாது போகும். மேலும், என்றென்றைக்குமான தமிழ் முஸ்லிம் உறவு கட்டி எழுப்பப்படும்.

கிழக்கு மாகாண சபைக்கான அடுத்த தேர்தலில் கணிசமான உறுப்பினர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெறுமாயின், முதலமைச்சரை ஐந்து வருடங்களுக்கும் முழுமையாக பெற்றுக் கொள்ளும் தார்மீக உரிமை அந்தக் கட்சிக்கே உரியது. தற்போது மூன்று ஆண்டுகள் முழுமையாக முதலமைச்சரை முஸ்லிம் காங்கிரஸ் அனுபவிப்பதற்கு கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்தமையால், அடுத்த முதலமைச்சரை 05 வருடங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுபவிப்பதற்கு, காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தே ஆகவேண்டிய தார்மீக நிர்ப்பந்தம் உள்ளது. கிழக்கின் முதலாவது முதலமைச்சராக தமிழர் ஒருவர் 05 வருடங்களாக பதவி வகித்தார், இரண்டாவது காலத்தில் 05 வருடங்களாக இரண்டு முஸ்லிம்கள் முதலமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர். எனவே, அடுத்த முதலமைச்சர் பதவி தமிழருக்கானது, அது முஸ்லிம்களுக்கானது அல்ல.

கிழக்கு மாகாண சபைக்கான அடுத்த தேர்தலின் பின்னர், உடனடியாக மேலெழும் அரசியல் நிலவரம் பதட்டமானதாகக் காணப்படும். முதலமைச்சர் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதில் இழுபறியும், குத்து வெட்டுகளும் ஏற்படும். சுய நலம் நிறைந்த, புதிய தற்காலிகக் கூட்டமைப்புகள் உருவாக வாய்ப்புகள் அதிகமாகும். இவ்வாறான சூழல் தோன்றினால், சிங்கள தரப்பு பிந்தைய அரைவாசிக் காலத்துக்கு முதலமைச்சரைப் பெறும் அதிசயத்தையும் நிராகரிக்க முடியாது.

‘சோர்விலாச் சொல்’ என்ற எனது நாடாளுமன்ற உரைகளின் தொகுப்பு நூல், 2014ஆம் ஆண்டு வெளியீட்டு வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வில் தலைவர் றவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார். அவ்வுரையில் என்னைக் குறித்து சொல்லும் போது, “எதார்த்தவாதி வெகுஜன விரோதி” என்ற பதத்தை உபயோகித்தார். அவரைத் தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்திய நான்; “வெகு ஜன விரோதிகள் அனைவரும் எதார்த்தவாதிகள் அல்ல” என்று கூறினேன்.

ஏனோ இது இப்போது என் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்