சூழ்ச்சிகரமாக, இழைக்கப்பட்ட அநியாயத்தை எதிர்த்து, உயர்பீட உறுப்பினர்கள் பேச வேண்டும்: ஹசனலி கோரிக்கை

🕔 September 20, 2016

Hasan Ali - 097– முன்ஸிப் அஹமட் –

முஸ்லிம் காங்கிரசில் தனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்துக்கு எதிராக, உயர்பீட உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டுமென, அந்தக் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசனலி கோரிக்கை விடுத்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரசில் தான் வகிக்கும் செயலாளர் பதவிக்கு, வேறொரு நபரொருவரின் பெயரை, தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளமையானது சூழ்ச்சிகரமானதொரு செயற்பாடு என்றும் எம்.ரி. ஹசனலி தெரிவித்தார்.

மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம், இன்று செவ்வாய்கிழமை இரவு கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ள நிலையிலேயே, இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

“முஸ்லிம் காங்கிரசின் ஆணை வழங்கும் உயர்பீடக் கூட்டத்தில், செயலாளரின் வேலைகளை இலகுபடுத்துவதற்காக உயர்பீட செயலாளர் பதவியொன்றினை உருவாக்கி, அதற்கு மன்சூர் ஏ. காதர் என்பவர் நியமிக்கப்படுவதாகக் கூறப்பட்டது. ஆனால், தேர்தல்கள் ஆணையாளருக்கு  அறிவிக்கும்போது, உயர்பீட செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்ட மன்சூர் ஏ. காதர் என்பவரை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் என்று அறிவித்து விட்டார்கள். இது சூழ்ச்சிகரமானதொரு செயற்பாடாகும்.

உயர்பீடக் கூட்டத்திலும், பின்னர் பேராளர் மாநாட்டிலும் இவ் விவகாரம் தொடர்பில் பேசப்பட்ட ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் இருக்கின்றன.

எவ்வாறாயினும், இது தொடர்பில் நான் நீதிமன்றத்துக்குச் செல்லப் போவதில்லை. எமது கட்சியை நீதிமன்றுக்கு அழைப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதேவேளை, முஸ்லிம் காங்கிரசை விட்டும் நான் விலகவும் மாட்டேன்.

முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடத்திலுள்ள உறுப்பினர்கள் இது தொடர்பில் பேச வேண்டும். ஆகக்குறைந்தது, எனக்கிழைக்கப்பட்ட அநியாயத்துக்கு எதிராக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள் குரல்கொடுக்க வேண்டும்.

கண்டியில் கடந்த வருடம் நடைபெற்ற பேராளர் மாநாட்டுத் தீர்மானங்களை வாசிக்கும் போது, மன்சூர் ஏ. காதர் என்பவர் வகிக்கும் உயர்பீட செயலாளர் பதவி பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டது. குறித்த நபர் முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட செயலாளராக இருப்பார் என்றும், அவரின் பதவிக் காலம் ஒரு வருடத்துக்குரியது எனவும், கட்சி தீர்மானிக்கும் ஒரு தொகைப் பணம், அவருக்கு மாதாந்தம் சம்பளமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதில் இன்னுமொரு நயவஞ்சகமும் நடைபெற்றது. மேற்படி தீர்மானத்தினை தமிழில் வாசிக்கும் போது, மன்சூர் ஏ. காதர் என்பவர் மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டபோதும், அதே தீர்மானத்தை ஆங்கிலத்தில் வாசிக்கும் போது மன்சூர் ஏ. காதர் என்பவர் மு.காங்கிரசின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், தமிழில் அறிவிக்கப்பட்டதையே அனைவரும் கவனித்தனர். ஆங்கிலத்தில் அறிவிக்கப்பட்டதை யாரும் அப்போது கவனித்திருக்கவில்லை” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்