மு.கா. உயர்பீடக் கூட்டம்: ஜனநாயகப் படுகொலையும், பேசாமலிருந்து துணைபோனவர்களும்

🕔 August 25, 2016

SLMS- Banner - 01
– றிசாத் ஏ காதர் –

முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில் இடம்பெற்ற வெட்கக்கேடான விடயம், ஊடகங்களில் இன்று பேசுபொருளாக மாறியிருக்கிறது.

உட்கட்சி ஜனநாயகம் தமது கட்சிக்குள் உள்ளதாக பீற்றிக் கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு முன்பாகவே, அந்தக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவருக்கான உரையாற்றும் சந்தர்ப்பத்தினை, நான்கைந்து உயர்பீட உறுப்பினர்கள் நாகரீகமற்ற முறையில் தடுத்திருக்கின்றனர். அவரின் பேச்சுச் சுதந்திரத்துக்கான உரிமையை தட்டிப் பறித்திருக்கின்றார்கள்.

இந்த செயற்பாடானது மிக மோசமான ஜனநாயகப் படுகொலையாகும். இதைச் செய்தவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது, கட்சிக்குள்ளிருக்கும் நாகரீகவாதிகளின் கருத்தாக உள்ளது.

இது ஒருபுறமிருக்க, நான்கு பேர் சேர்ந்து – கட்சியின் உயர்பீடத்தில், இரண்டாம் நிலைத் தலைவர் ஒருவரின் பேச்சைத் தடுக்கும் வகையிலான, ஜனநாயகப் படுகொலையில் ஈடுபட்டபோது, அதைத் தட்டிக் கேட்க முடியாமல் அந்தக் கூட்டத்தில் இருந்த ஏனைய உறுப்பினர்களின் மௌனங்களும், இயலாமைகளும் – மேற்படி ஜனநாயகப் படுகொலைக்கு எந்தவிதத்திலும் குறைவானதல்ல.

நான்கைந்து பேர் சேர்ந்து செய்த ஜனநாயகப் படுகொலையினைத் தடுக்க தவறியவர்களும், அந்தப் படுகொலையின் பழியினைச் சுமந்தேயாக வேண்டும்.

கட்சிக்குள் தலைவரும் – தவிசாளர் மற்றும் செயலாளரும் பிரச்சினைப் படாமல் ஒற்றுமையாகுமாறு, ஊடகங்களில் கடிதம் எழுதிய எஸ்.எல்.எம். ஹனீபா மதனி போன்றவர்களின் தைரியம், இந்த ஜனநாயகப் படுகொலை நிகழும் போது எங்கே போனது?

தலைவருக்கும் – தவிசாளர் மற்றும் செயலாளருக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் உறுப்பினர்களான, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம். ஜவாத் மற்றும் கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யு.எல்.எம். முபீன் போன்றோர் இதன்போது ஏன் மௌனமானார்கள்?

மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில் நிகழ்ந்த கூச்சலையும், அந்தக் கூச்சலை ஏற்படுத்தியவர்களையும் வெளியில் வந்து விமர்சிக்கும் உயர்பீட உறுப்பினர்களின் நேர்மையும், நியாயமும் எடுபடப் போவதில்லை. பேச வேண்டிய இடத்தில் பேசாமலிருந்து விட்டு, வெளியில் வந்து பேசிக் கொண்டிருப்பதில் பிரயோசனங்கள் எவையுமில்லை.

மு.கா. தவிசாளர் பசீர் பேசுவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்கியிருந்தால், தாருஸ்ஸலாம் உள்ளிட்ட கட்சியின் சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சைகளுக்கு, சிலவேளை அந்த இடத்திலேயே முடிவு கண்டிருக்கலாம். ஆனால், அதைத் தடுத்தமையின் விளைவுகளை மு.கா. தலைவர் சுமக்க வேண்டியதொரு சூழல் உருவாகும் என்பது நமது அனுமானமாகும்.

புதிய அரசியல் யாப்பு, தீர்வுத் திட்டம் போன்றவை தொடர்பில் அடுத்த சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில், முஸ்லிம் சமூகத்தின் கணிசமான வாக்குகளைப் பெற்றுக் கொண்ட அரசியல் கட்சியொன்றின் தலைவர்களும், அவர்களின் விசிலடிச்சான் குஞ்சுகளும் கூக்குரலிட்டு, குழப்படி செய்து கொண்டிருப்பது – வெட்கக் கேடான விடயமாகும்.

கட்சிக்குள் ஒருவரை பேசுவதற்கு அனுமதிக்காதவர்கள், வெளியில் வந்து மேடையில் ஜனநாயகம் குறித்தும், உரிமைகள் தொடர்பிலும் பேசும்போது, அதனை பொதுமக்கள் இனி கோமாளித்தனமாகவே பார்ப்பார்கள்.

தங்களுக்குப் பிடிக்காத விடயத்தை, தங்கள் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர் பேசுவதைக் கூட அனுமதிக்காத இந்த ஆசாமிகள், தமக்கு எதிரான அரசியல் கருத்துக்களைக் கொண்ட சாதாரண பொதுமக்கள் மீது, எவ்வளவு மோசமான வன்முறையினைப் பிரயோகிப்பார்கள் என்று நினைக்கையில் அச்சமாக உள்ளது.

ஒரு குற்றவாளிக்குக் கூட, அவர் தரப்பு நியாயங்களைக் கூறுவதற்கு நீதிமன்றில் சந்தர்ப்பம் வழங்கப்படும் போது, பசீர் ஏன் பேசாமல் தடுக்கப்பட்டார்?

முஸ்லிம் காங்கிரசின் சொத்துக்களில் மோசடிகள் இடம்பெற்றிருக்கிறது என்று சொல்லப்படும் குற்றச்சாட்டு, இப்போதுதான் வலுக்கத் தொடங்குகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்