‘கல்விக்காக ஓடுவோம்’: சர்வதேச மரதன் போட்டி; பொத்துவிலில் ஏற்பாடு

🕔 July 14, 2016

ADJ - 011
– றிசாத் ஏ காதர் –

‘கல்விக்காக ஓடுவோம்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச மட்டத்திலான மரதன் ஓட்டப் போட்டியொன்று எதிர்வரும் 17 ஆம் திகதி பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது.

பொத்துவில் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கான நிதியினைத் திரட்டும் நோக்குடன், ‘அறுகம்பை அபிவிருத்தி ஒன்றியம்’ இந்த போட்டி நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த மரதன் ஓட்டப் போட்டி நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக – இலங்கை கிரிக்கட் வீரர்களான சாமர கப்புகெதர, தம்மிக்க பிரசாத், ஜெப்ரி வெல்லஸே மற்றும் பொத்துவில் பிரதேசத்திலிருந்து சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்ற அஸ்ரப் லத்தீப் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேற்படி போட்டி நிகழ்வு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, ஒன்றியத்தின் தலைவர் எம்.எச்.எம். ஜவாஹிம் தலைமையில் அறுகம்பை ‘றை ஸ்டார்’ ஹோட்டலில் புதன்கிழமை இடம்பெற்றது.

இதன்போது, ஒன்றியத்தின் செயலாளர் டொக்டர் இஸட். எம். ஹாஜித், மேற்படி போட்டி நிகழ்வு குறித்து விளக்கமளித்தார்.

பொத்துவில் பிரதேச கல்வி நடவடிக்கைக்கான நிதியினை திரட்டும் நோக்குடன், மேற்படி மரதன் ஓட்டப் போட்டியினை, சர்வதேச மட்டத்தில் தாங்கள் ஏற்பாடு செய்திருப்பதாக செயலாளர் ஹாஜித் கூறினார்.

21.5 கிலோமீற்றர் தூரத்தினைக் கொண்ட – அரை மரதன் போட்டியாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், ஆண், பெண் வீரர்களுடன் சிறுவர்களும் கலந்து கொள்ள முடியும் என்றார்.

எவ்வாறாயினும், பெண் வீரர்கள் மற்றும் சிறுவர்களுக்கு குறைந்தளவான தூரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இப்போட்டியில் 200 வீரர்கள் கலந்துகொள்வார்கள் என – தாம் எதிர்பார்ப்பதாகவும், இதுவரையில் நூற்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் தமக்குக் கிடைத்துள்ளதாகவும் இதன்போது அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, வெளிநாட்டு வீரர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் டொக்டர் ஹாஜித் குறிப்பிட்டார்.

இப்போட்டியில் வெற்றிபெறும் முதல் மூன்று வீரர்களுக்கும் பணப் பரிசுகள் வழங்கப்படவுள்ளதோடு, போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொள்ளும், இலங்கை கிரிக்கட் வீரர்களும், மேற்படி மரதன் ஓட்டத்தில் கலந்து சிறப்பிக்கவுள்ளமை சிறப்பம்சமாகும்.

‘அறுகம்பை அபிவிருத்தி ஒன்றியம்’ ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, மூவின மக்களின் கல்வி, கலாசார மற்றும் அபிவிருத்திப்பணிகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.ADJ - 022

Comments

புதிது பேஸ்புக் பக்கம்