ஜும்ஆவுக்கு மூடிய கடைகளைப் படமெடுத்து, ஹர்த்தால் என செய்தி வெளிட்டது சக்தி ரி.வி: மகாராஜாவுக்கு காத்தான்குடி மீடியா போரம் கடிதம்

🕔 January 15, 2019

கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை, முஸ்லிம் பகுதிகளில் எங்குமே ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படாத நிலையில், ஜும்ஆ தொழுகைக்காக மூடப்பட்டிருந்த கடைகளை படம் பிடித்து, கிழக்கு ஆளுநருக்கு எதிராக முஸ்லிம்கள் கடையடைப்புச் செய்தனர் என்று, சக்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதாகவும், இதன் மூலம் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்ததாகவும் குறிப்பிட்டு, சக்தி நிறுவனத்தை நடத்தும் மகாராஜா ஊடக வலையமைப்பின் பணிப்பாளருக்கு காத்தான்குடி மீடியா போரம் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளது.

காத்தான்குடி மீடியா போரம் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா கையெழுத்திட்டு அனுப்பி வைத்துள்ள மேற்படி கடிதத்தில்; ‘தமிழ் பேசும் மக்களின் ஊடகமாக தங்களது ஊடக வலையமைப்பு செயற்படுகின்றது என்று பெருமையாக நீங்கள் கூறிக் கொண்டாலும், ஒரு தலைப்பட்சமாக ஒரு சமூகத்தின் குரலாகவே உங்களது ஊடகம் செயற்படுகின்றது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்தக் கடிதத்தில்;

‘இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயங்களையும் சிங்களம் தமிழ்; ஆகிய பிரதான மொழிகளையும் கொண்டுள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள்.

இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்களின் ஊடகமாக தங்களது ஊடகவலையமைப்பு செயற்படுகின்றது என்று பெருமையாக நீங்கள் கூறிக் கொண்டாலும் ஒரு தலைப்பட்சமாக ஒரு சமூகத்தின் குரலாகவே உங்களது ஊடகம் செயற்படுகின்றது என்பதே உண்மையாகும்.

தமிழ் பேசும் மக்களின் ஊடகமாக நீங்கள் மார்தட்டி எத்தனை தடவைகள் கூறினாலும் உங்களுக்கு என்று இருக்கின்ற ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றீர்கள்.

நீங்கள் ஒளிபரப்பும் பல செய்திகள் இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை சீண்டிப்பார்க்கின்ற செய்திகளாகவே முஸ்லிம் சமூகத்தினால் பார்க்கப்படுகின்றது.

இதனால் உங்களது தொலைக்காட்சி மற்றும் வானொலி மீது முஸ்லிம் சமூகம் மிகையான வெறுப்புணர்வை கொண்டுள்ளது என்பதை உங்களுக்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

நீங்கள் விரும்பும் ஒரு சமூகத்திற்கு எங்காவது ஒரு மூலையில் ஏதாவது சிறிய ஒரு சம்பவம் நடைபெற்றாலும் அதனை ஊதிப் பெருப்பித்து காண்பிக்கின்ற அதேவேளை முஸ்லிம் சமூகத்திற்கு கடந்த காலங்களில் நடந்த அநியாயங்களையும் முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜக அடாவடித்தனங்களில் ஒன்றையேனும் ஒளிபரப்ப தவறி விட்டதுடன் முஸ்லிம் சமூகத்தின் இழப்புக்களையும் மறைத்து விட்டீர்கள்.

அந்த வகையில் கிழக்கு மாகாண புதிய ஆளுநருக்கு எதிராக கடந்த 11.01.2019 வெள்ளிக்கிழமையன்று ஹர்தால் ஒன்றுக்காக கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அன்றைய தினம் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் எங்குமே ஹர்தால் அனுஷ்டிக்கப்படவில்லை. மாறாக முஸ்லிம்களின் கணிசமான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததுடன் முஸ்லிம் பிரதேசங்களில் அன்றைய தினம் இயல்பு நிலை காணப்பட்டது. ஆனால் அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால் ஜும்ஆத் தொழுகைக்காக மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களை வீடியோ படம் எடுத்து அதனை ஒளிரப்புச் செய்தீர்கள்.

பொய்யான செய்தியை ஒளிரப்புச் செய்து கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்.ஆனால் இந்த நாட்டிலுள்ள தமிழ் அச்சு ஊடகங்கள் அந்தச் செய்தியை பொறுப்புடன் வெளியிட்டிருந்தது என்பதையும் உங்களுக்கு தெரியப் படுத்திக் கொள்ள விரும்புகின்றோம்.

புனித ரமழான் மாதம் நோன்பு காலத்தில் விளம்பர வருமானத்தை இலக்காகக் கொண்டு ஸஹர் விஷேட நிகழ்வு, நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வு அல்லது பெருநாள் தினத்தன்று நீங்கள் ஒளிபரப்பும் விஷேட நிகழ்வுகளை வைத்து முஸ்லிம் சமூகத்திற்கான ஊடகமாகவும் நாங்கள் திகழ்கின்றோம் என்றோ அல்லது உங்களுக்கு தேவையான முஸ்லிம் அரசியல் வாதிகளைக் கொண்டு அரசியல் நிகழ்வுகளை நடாத்துவதை வைத்தோ முஸ்லிம் சமூகத்திற்கான ஊடகமும் தான் என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தாலும் முஸ்லிம் சமூகம் அதை ஏற்றுக் கொள்ள ஆயத்தமில்லை.

எனவே முஸ்லிம்களின் உணர்வுகளை மதித்து நடந்து கொள்ளுங்கள் ஊடக சம நிலையைக் கடைப்பிடியுங்கள் என ஆலோனை கூறுகின்;றோம். முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்பார்ப்புக்கள் முஸ்லிம்களின் உணர்வுகளை இருட்டடிப்பு செய்யாதீர்கள்

ஊடக ஒழுக்கத்தை பேணி நடந்து கொள்ளுங்கள் ஊடக சம நிலையையும் ஏற்படுத்துங்கள் என உங்களிடம் கேட்டு விடை பெறுகின்றோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்