ஜனாதிபதி வேட்பாளர் யார்; மஹிந்த, மைத்திரி தரப்பிடையே கருத்து வேறுபாடு: மீண்டுமொரு பிளவை உருவாக்குமா?

🕔 January 13, 2019

ந்த வருட இறுதியில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும்  ஜனாதிபதி தேர்தலில்,  ஐக்கிய தேசிய முன்னணி சார்பான வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் பொதுவேட்பாளர் யார் என்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்புக்கும் மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளன.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன, அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவுடன் கைகோர்த்தார்.

இதனையடுத்து, மைத்திரிபால சிறிசேன தலைமைதாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், மஹிந்த ராஜபக்ஷ சார்பான பொதுஜன பெரமுன கட்சியும் கூட்டணி அமைத்து எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடும் என்று, அரசியரலங்கில் பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவுடன், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் போட்டியிடுவார் என்கிற எதிர்பார்ப்புகளும் வெளியாகியிருந்தன.

ஆயினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு எதிரான பொது வேட்பாளர் யார் என்பதில், மஹிந்த மற்றும் மைத்திரி தரப்பினருக்கு இடையில், தற்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதோடு, அவற்றினை அவர்கள் வெளிப்படையாகவும் பேசி வருகின்றனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனதான் களமிறங்குவார் என்று, அந்தக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் நாடளுமன்ற உறுப்பினருமான நிமல் சிறிபால டி சில்வா நேற்று முன்தினம் வெள்ளிக்கிமை தெரிவித்திருந்தார்.

“ஐக்கிய தேசிய முன்னணிக்கு எதிரான பொது வேட்பாளராக, மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்கொண்டு செல்லும். இதன்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான சக்திகளின் ஆதரவும், பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவும் பெற்றுக் கொள்ளப்படும்” என்றும், நிமல் சிறிபால டி சில்வா மேலும் கூறியிருந்தார்.

ஆனால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதில்லை என்று, பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர் என்று, கோட்டாபய ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளரும், கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான மிலிந்த ராஜபக்ஷ, ‘ட்விட்டர்’ பக்கத்தில் நேற்று சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை, மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு வழிவகுக்கும் என்பதால், நாட்டுக்கு இந்த ஆண்டு முக்கியமானதாகும் என்றும், மக்கள் தயார் என்றால், எந்தவொரு சவாலை எதிர்கொள்வதற்கும் தான் தயாராகவுள்ளதாகவும், கோட்டாபய ராஜபக்ஷ, நிகழ்வொன்றில் உரையாற்றும் போது தெரிவித்ததாக, மிலிந்த ராஜபக்ஷ தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே, ஜனாதிபதித் தேர்தலில்  ஐக்கிய தேசிய முன்னணியை எதிர்த்து, பொது வேட்பாளராக யார் போட்டியிடுவது என்பது தொடர்பில் வெளியிடப்படும் ஏட்டிக்குப் போட்டியான மேற்படி கருத்து வேறுபாடுகள், மஹிந்த மற்றும் மைத்திரி ஆகியோருக்கிடையில் மீண்டும் ஒரு பிளவை ஏற்படுத்தி விடுமா என்கிற கேள்வியும் அரசியலரங்கில் தோன்றியுள்ளது.

பிபிசி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்