பேராசிரியர் ஹஸ்புல்லா: முஸ்லிம் சமூகத்தின் பெரும் சொத்து

🕔 August 25, 2018

– மப்றூக் –

லங்கை முஸ்லிம்களின் நலனை முன்னிறுத்தி, பல்வேறு அடையாளங்களுடன் செயற்பட்டு வந்த பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாவின் மரணம், முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய இழப்பாகும்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல்துறை பேராசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்ற இவர், மன்னார் மாவட்டத்திலுள்ள எருக்கலம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

1990 காலப் பகுதியில் இலங்கையின் வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை, விடுதலைப் புலிகள் வெளியேற்றிய போது, இவரும் தனது குடும்பத்துடன் இடம்பெயர்ந்தார்.

இதனையடுத்து, ‘வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு’ ஒன்றினை உருவாக்குவதில் இவர் முன்னின்று உழைத்தார். பின்னர், இந்த அமைப்பினூடாக, இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துவதற்குப் பெரும் பாடுபட்டார்.

இறக்கும் போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராக இவர் பதவி வகித்தார். பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு, இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்குச் சென்றிருந்த போதே, அங்கு திடீர் மரணமடைந்தார்.

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம், இலங்கை முஸ்லிம்களின் தேசிய அடையாளம் மற்றும் முஸ்லிம்கள் மீள் குடியேறும்போது எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பில், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இவர் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.

குறிப்பாக, “இலங்கையில் யுத்தம் நிலவிய காலப்பகுதியில் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளை, சர்வதேச மயப்படுத்தியவர்களில் பேராசிரியர் ஹஸ்புல்லாவை மிக முக்கியமான ஒருவராகக் கூற முடியும்” என்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் முபீஸால் அபூபக்கர் கூறினார்.

இலங்கை அரசியலமைப்பின் 17ஆம் திருத்த சட்டத்துக்கு அமைய உருவாக்கப்பட்ட, மூவர் அடங்கிய  சுயாதீன எல்லை நிர்ணய ஆணைக் குழுவில், பேராசியர் ஹஸ்புல்லாவும் ஓர் அங்கத்தவராக நியமிக்கப்பட்டார்.

அதேவேளை, மாகாணங்களின் தொகுதிகளை எல்லை நிர்ணயம் செய்யும்  குழுவிலும், இவரை அரசாங்கம் நியமித்திருந்தது. ஐவரைக் கொண்ட அந்தக் குழுவில், பேராசிரியர் ஹஸ்புல்லா மட்டுமே முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது.

“இலங்கை முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து வெளிநாடுகளில் பேராசிரியர் ஹஸ்புல்லா அதிகளவு தடவை உரை நிகழ்த்தியுள்ளார். சிறுபான்மை மக்கள் குறித்து ஆய்வு செய்கின்ற, சர்வதேச ஆய்வாளர்களை இலங்கைக்கு இவர் அழைத்து வந்து, இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஆய்வுக்குட்படுத்தச் செய்துள்ளார். அதன் மூலம், இலங்கை முஸ்லிம்கள் உள்நாட்டில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துவதற்கு காரணமாக, பேராசிரியர் ஹஸ்புல்லா இருந்துள்ளார்” என, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் முபீஸால் அபூபக்கர் மேலும் தெரிவித்தார்.

சிங்கள மற்றும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த கல்வித்துறையாளர்கள் மற்றும் புத்திஜீவிகளின் ஆதரவுடன், இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை உள்நாட்டில் இவர் வெளிக்கொண்டு வந்தார். மேலும், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை ஏனைய சமூகங்களுக்குப் புரிய வைப்பதற்கும் பேராசிரியர் ஹஸ்புல்லா தொடர்ச்சியாக உழைத்து வந்தார்.

முஸ்லிம் சமூகத்தின் பெரும் சொத்தாக மதிக்கப்படும் பேராசிரியர் ஹஸ்புல்லாவின் மரணம், இலங்கைக்கும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்கும் பாரிய இழப்பாகும்.

தொடர்பான செய்தி: பேராசிரியர் ஹஸ்புல்லா திடீர் மரணம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்