90 ரூபாய்க்கு பெற்றோலை விற்பனை செய்ய முடியும்; எப்படியென்று விளக்கினார் உதய கம்மன்பில

🕔 May 14, 2018

பெற்றோலை 90 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியுமென நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது, அவர் இதனைக் கூறினார்.

இறக்குமதி வரி, உள்நாட்டு வரி, துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி, தேச நிர்மாண வரி ஆகிய நான்கு வரிகள் எரிபொருட்களுக்கு விதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில்;

“உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, 67 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்ற நிலையில் அரசாங்கம் பெற்றோலின் விலையை 137 ரூபாவாக  கடந்த 10ஆம் திகதி உயர்த்தியுள்ளது.

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியின்போது, 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதி, மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலர்களாக இருந்த சந்தர்ப்பத்தில் ஒரு லீட்டர் பெற்றோலை 137 ரூபாய்க்கு விற்பனை செய்தோம்.

எனினும் இந்த அரசாங்கம் மசகு எண்ணெயின் விலை 67 டொலர்களாக காணப்படுகின்ற நிலையில் பெற்றோலின் விலையை அதிகரித்துள்ளது.

பெற்றோலை ஏன் 117 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியவில்லை என்பது தொடர்பில் அரசாங்கத்தின் பொருளியல் நிபுணர்கள் விளக்கமளிக்க வேண்டும்” என்றார்.

Comments