யாழ் மாநகர சபை முதல்வராக, இம்மானுவல் ஆர்னோல்ட் தெரிவு

🕔 March 26, 2018
– பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக யாழ். மாநகர முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ரகசிய வாக்கெடுப்புக்கு இரண்டாவது தடவையாக தெரிவான ஈ.பி.டி.பி. மேயர்  வேட்பாளர் முடியப்பு ரெமீடியஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து,  யாழ். மாநகர முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட் ஏகமனதாக  தெரிவானார்.

முன்னதாக, இன்று திங்கட்கிழைமை காலை 09 மணியளவில் ஆரம்பமான யாழ். மாநகரசபையின் முதலாவது அமர்வில், முதல்வரைத் தெரிவு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையடுத்து, மாநகர முதல்வர் பதவிக்கு  இம்மானுவல் ஆர்னோல்டின் பெயரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்மொழிந்தது.

மேயர் வேட்பாளர்களாக வி. மணிவண்ணனின் பெயரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், ரெமீடியசின் பெயரை ஈ.பி.டி.பி.யும் முன்மொழிந்திருந்தன.

இதையடுத்து ரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு,  வாக்கெடுப்பு நடந்தது.

ரகசிய வாக்கெடுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்திய ஆர்னோல்ட் 18 வாக்குகளைப் பெற்றார்.

ஈ.பி.டி.பி நிறுத்திய ரெமீடியசும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிறுத்திய வி. மணிவண்ணனும், தலா 13 வாக்குகளைப் பெற்றனர்.

இதனால், இறுதி வாக்கெடுப்புக்காக சம வாக்குகளைப் பெற்ற ரெமீடியஸ் மற்றும் மணிவண்ணன் ஆகியோரில் ஒருவரை சீட்டுக் குலுக்கல் மூலம் தெரிவு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, இவர்களின் பெயர்கள் எழுதப்பட்டு. அவற்றில் ஒன்று எடுக்கப்பட்டது. அதில் ரெமீடியசின் பெயர் தெரிவானது.

இதையடுத்து, மணிவண்ணன் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். இரண்டாவது ரகசிய வாக்கெடுப்பில் ஆர்னோல்டும், ரெமீடியசும் மோதுவர் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, ஈ.பி.டி.பி மேயர்  வேட்பாளர் முடியப்பு ரெமீடியஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து,  யாழ். மாநகர முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட் ஏகமனதாக  தெரிவானார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்