ஹாபிஸ் நசீரின் கட்டுப்பாட்டில் தராசு கட்சி உள்ளது; ஹக்கீமும் சேர்ந்து அலிசாஹிர் மௌலானாவை ஏமாற்றி விட்டார்: ஆவணங்களுடன் நிரூபிக்கிறார் பசீர்

🕔 January 15, 2018

– அஹமட் –

றாவூர் நகரசபைக்கான தேர்தலில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீரின் அணியை எதிர்த்து, நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, தனது அணியினை களமிறக்கியிருக்கும் தராசு சின்னத்தைக் கொண்ட முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு எனும் கட்சி, ஹாபிஸ் நசீரின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரகாரம், தேர்தல் ஆணைக்குழுவிலிருந்து பெற்றுக் கொண்ட ஆவணங்களை ஆதாரமாக முன்வைத்து, அவர் இதனைக் கூறியுள்ளார்.

“முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் அனைத்துத் தீர்மானங்களையும், அந்தக் கட்சியின் அரசியல் பீடமே எடுக்கும் என, அந்தக் கட்சியின் யாப்பு தெரிவிக்கின்றது. முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் அரசியல் பீடத்தில் 13 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 09 பேர், ஹாபிஸ் நசீருடைய ஆட்கள்” எனவும் பசீர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவை விளித்து, தனது பேஸ்புக் பக்கத்தில் பசீர் சேகுதாவூத் எதியுள்ள பதிவு ஒன்றிலேயே இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

அலிசாஹிர் மௌலானா, உங்களுகளை ஹாபிஸ் நசீர் ஹறாமி என்றும், உன்னை செருப்பால் அடிப்பேன் என்றும் ஹக்கீம் முன்னிலையில் சொன்னார். இதனால் நீங்கள் ஹாபிஸ் தலைமையில் தேர்தலில் பங்கு கொள்ளும் எந்தக் கட்சியிலும் உங்கள் வேட்பாளர்களை நிறுத்த மறுத்தீர்கள்.

திட்டமிட்ட நாடகம்

ஆனால்,  நசீர் ஹாபிசின் பூரண கட்டுப்பாட்டிலுள்ள முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பில் உங்கள் அணியினரை தலைவர் தேர்தலில் குதிக்க வைத்துள்ளார். ஹாபிஸ் நசீருடன் சேர்ந்து தலைவர் திட்டமிட்டு நாடகமாடி உங்களைக் கவிழ்த்துள்ளார். இது, உங்கள் கன்னத்தில் நேரடியாக ஹக்கீம் செருப்பால் அடிப்பதற்குச் சமனானதாகும். மட்டுமல்ல, அவர் உங்களை அரசியல் ரீதியாக ‘ஹறாமி’ என்று திட்டியதற்கும் சமனானதாகும். இவை வெறும் சொற்பிரயோகமல்ல செயல் பிரயோகம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

ஹாபிஸ் நசீருக்கு, அவருடைய சகோதரின் மகன் சறூஜ் மட்டும் வெற்றி பெற்றால் அல்லது வீதாசார உறுப்பினர் ஒருவர் மட்டும் கிடைத்தால் போதும். அது சறூஜை ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் ஆக்குவதற்குப் போதுமானதாகும். இதனை இலக்கு வைத்தே தலைவரும், பிரதித் தலைவரும் இணைந்து செயல்படுகிறார்கள்.

ஆவணங்களும், விபரங்களும்

தேர்தல் ஆணைக்குழுவிலிருந்து பெற்றுக் கொண்ட, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் உண்மை ஆவணங்களை இதோ உங்களுக்கும் மக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

1) தேர்தல் ஆணைக்குழுவில் பணம் செலுத்தி ஆவணத்தைப் பெற்றுக்கொண்ட பற்றுச்சீட்டு இணைக்கப்பட்டுள்ளது. (தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இலங்கைப் பிரசை எவரும் எந்தக்கட்சியின் ஆவணத்தையும் பெற்றுக் கொள்ளலாம். ஏறாவூர் மானஸ்த மக்களே, நீங்களும் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளுங்கள்.)

2) யாப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள கட்சியின் விலாசம் 181, காலி வீதி, கொழும்பு. 06 வெள்ளவத்தை என்பதாகும் இது அஸாம் அவர்களது குடும்பம் குடியிருந்த வீட்டு விலாசம்.

3) யாப்பின்படி கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் தொகை 60 பேர் மாத்திரம்தான். எந்தவொரு கூட்டத்துக்கும் தேவைப்படும் கோரம் மூன்றில் ஒன்றுதான்.எனவே 20 பேர் எதனையும் செய்ய முடியும். ( யாப்பில் 9 ஆம் இலக்கத்தை வாசிக்க)

4) கட்சியின் தீர்மானம் ( யாப்பு 8 ஆம் இலக்கம்):
இதன் பிரகாரம் எல்லாத் தீர்மானங்களும் அரசியல் பீடத்தினால் மேற்கொள்ளப்படும். தீர்மானிக்கும் சபை – அரசியல் பீடமாகும். இதன் தீர்மானத்துக்கு கட்சியின் அனைத்து உத்தியோகத்தர்களும் கட்டுப்படல் வேண்டும். அரசியல் பீட த்தில் 13 அங்கத்தவர்களே உள்ளனர்.

ஹாபிசின் ஆதிக்கம்

உத்தியோகத்தர் பட்டியல் தரப்பட்டுள்ளது.

இதில் தலைவர்கள் மூவர் உட்பட 09 பேர் ஹாபிசின் குடும்ப உறுப்பினர்களும், அவருடைய கம்பனியில் வேலை செய்வோருமாவர்.

யாப்பின் அடிப்படையில் தீர்மானிப்பது அரசியல் பீடம்,  கோரம் மூன்றில் இரண்டு, அரசியல் பீடத்தில் 09 பேர் ஹாபிசின் ஆட்கள். எனவே, தீர்மானம் எடுக்க 05 பேர் போதுமானதாகும்.

ஆகவே யாருடைய கட்சி இது? இக்கட்சியின் தீர்மானிக்கும் சக்தி ஹாபிஸ் அன்றி வேறுயார்? போதாததற்கு எதிர்கால தவிசாளர் சறூஜ் இக்கட்சியின் பொருளாளராக உள்ளார். அவரின் வாப்பா அஸாம் தலைவர், மச்சான் முர்சலீன் மௌலவி தலைவர்களில் ஒருவர், சாச்சா ஹினாயதுல்லாஹ் பிரதி இணைப்புச் செயலாளர் வேறென்ன வேண்டும்? செயலாளர் நயீமுல்லாவைக் கட்சியில் இருந்து தூக்கி எறியும் அதிகாரம் ஹாபஸ் நசீரிடம் உள்ளது.

அன்பின் நண்பர் அலி சாஹிர் அவர்களே, ஆதாரங்களோடு நிரூபித்திருக்கிறோம். நீங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதை இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள்.

காப்பாற்ற ஒன்று சேருங்கள்

ஏறாவூர் மக்களே, நீங்கள் ஏமாறவில்லை, அரசியலில் ஆனானப்பட்டவர்களுக்கெல்லாம் அல்வா ஊட்டி விட்டவர்களின் ஊர் எமது ஊர். உங்களை ஏமாற்ற இந்த ஹக்கீமால் முடியாது. ஆனால் ஊரைச் சேர்ந்த பிரதிநிதியான தனி அரசியல்வாதியை ஏமாற்றித்தான் விட்டார் ஹக்கீம்.

ஹக்கீமும் ஹாபிஸ் நசீரும்ட இணைந்து தாறுஸ்ஸலாத்தைக் கொள்ளையடித்தார்கள். அஷ்ரஃப் சேரின் பொது நிதியத்தைக் கொள்ளையிட்டார்கள், கட்சியின் பொதுக் கம்பனியைக் களவாடினார்கள். கட்சியையே திருடினார்கள். கடைசியில் நமது ஊரையும், காத்தான்குடியையும் தராசைக் கொண்டு வந்து நிறுத்துக் கொள்ளையிட முனைகிறார்கள். இரண்டு ஊரும் இணைந்து கொள்ளையர்களை விரட்டியடிப்போம் வாருங்கள் தோழர்களே. ஊர்களைக் காப்பாப்பாற்றுவோம் வாருங்கள் நண்பர்களே. ஊர்களை மட்டுமல்ல மௌலானாவையும், ஷிப்லியையும் கூட காப்பற்றுவோம் இன்ஷா அழ்ழாஹ்.

முழு ஆதாரங்களையும் தமிழில் மொழி பெயர்த்து ஆவணங்களை ஸ்கேன் செய்து துண்டுப்பிரசுரம் தயாரித்து விரைவில் வெளியிடுவோம். றவூப் ஹக்கீம் உட்பட எவருடனும் இது தொடர்பான மேலும் ஆவணங்களோடு வந்து விவாதிக்கத் தயாராகவும் இருக்கிறோம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்