துரோகத்தின் கதை: மசூர் சின்னலெப்பையும், மு.கா. தலைவரும் (ஏமாற்றம்-02)

🕔 December 27, 2017

– மரைக்கார் –

சூருக்கு எம்.பி. தருவதாக கூறியது எனது விரும்பமாகும். அது – என்னுடைய வாக்குறுதியல்ல என்று, ரஊப் ஹக்கீம் கூறியதும், அங்கிருந்தவர்களின் தலைகளில் இடி இறங்கியதுபோல் உணர்ந்தார்கள்.

அதன்போது, அங்கு மௌனத்தை உடைத்துப் பேசியவர் ஹக்கீமிடம்; “நான் லோயர் மாதிரி பேசுவதாக நீங்கள் சொல்லி விட்டு, இப்போது நீங்கள்தான் ஒரு லோயராகப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார்.

தலைவருக்கான கைங்கரியம்

அப்போது ஹக்கீம் தனது குரலைத் தாழ்த்தி தனது செயலுக்கான நியாயங்களைக் கூறத் தொடங்கினார். இந்த விடயத்தில் குழப்பம் ஏற்படுத்தாமல் போவதுதான் தலைவருக்குச் செய்யும் பெரும் கைங்கரியம் என்று கேட்டுக் கொண்டார்.

கொழும்பில் வேலை செய்யும் அட்டாளைச்சேனை இளைஞர்களும் அங்கு வந்திருந்தனர். அவர்களுக்கும் ஹக்கீமுடைய பதில் – பெரும் ஏமாற்றமாக இருந்தது. அவர்களும் ஆதங்கத்துடன் தங்கள் ஊருக்கான நாடாளுமன்ற உறுப்பினரை் பதவியைத் தருமாறு சத்தமாகப் பேசினர். ஹக்கீம் அசையவேயில்லை.

இறுதியாக, இனி எதுவும் நடக்காது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அங்கு பேசுவதில் எந்தப் பயனும் இல்லை என்பதை விளங்கிக் கொண்டவர்கள் அந்த இடத்திலிருந்து வெளியேறினார்கள்.

அவமானம்

அந்த நிகழ்வால் மசூர் சின்னலெப்பை மிகவும் ஏமாந்து போனார். மனதளவில் அவர் மிகவும் பாதிக்கப்பட்டார்.

மசூர் சின்னலெப்பை வெள்ளாந்தியான ஒரு மனிதர். அரசியல்வாதிகளுக்குரிய சூதுவாதுகள் தெரியாதவர். அதனால், தேசியப்பட்டியல் விவகாரத்தில் ஹக்கீம் கொடுத்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்வதற்கு மிகவும் கஷ்டப்பட்டார்.

மசூர் சின்னலெப்பையினுடைய பெயர் தேசியப்பட்டியலில் போடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்ட போதே, அது அவருக்குக் கிடைக்காது – ஹக்கீம் ஏமாற்றி விடுவார் என்று, எதிர்க்கட்சியினர் பிரசார மேடைகளில் பகிரங்கமாகத் தெரிவித்தனர். அது மாதிரியே நடந்தும் விட்டதால், தான் மேலும் அவமானப்பட்டதாக மசூர் உணர்ந்தார். அதனால், ஊருக்கு வராமல் கொஞ்சக் காலம் கொழும்பிலேயே இருந்தார்.

பின்னர் ஊருக்கு வந்த போதும், “மக்களின் முகத்தில் முழிப்பதற்கு வெட்கமாக இருக்கிறது” என்று, அவருக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிக் கவலைப்பட்டார்.

இந்த ஏமாற்றத்திலிருந்து மீண்டெழுவதற்கு மசூர் – மிகவும் சிரமப்பட்டார். சிலநேரம் இந்த அரசியலே தேவையில்லை என்கிற வெறுப்பின் விளிம்புக்குக் கூட அவர் வந்திருந்தார்.

புலிவால் 

ஆனால், அரசியல்வாதியாவது புலி வாலைப் பிடித்த கதை என்பதுதான் நமக்குத் தெரியுமே. அரசியலுக்குள் நுழைந்து விட்டால், பிறகு, நாம் விரும்பினாலும் அதற்குள்ளிருந்து வெளியேறுவதென்பது பெருங் காரியமாகும்.

அதனால், ஊரின் பெரும்பான்மையினர் ஆதரித்த முஸ்லிம் காங்கிரசினூடாகவே, தொடர்ந்தும் தனது அரசியல் வாழ்க்கையை ஓட்டிச் செல்வதுதான் மசூர் சின்னலெப்பைக்குரிய தெரிவாக இருந்தது.

இதை ஹக்கீமும் அறிந்து வைத்திருந்தார்.

இன்னொருபுறம், தேசியப்பட்டியல் விவகாரத்தோடு, மசூரிடம் தனது ஏமாற்று விளையாட்டினை ஹக்கீம் நிறுத்திக் கொள்ளவுமில்லை.

பழக்க தோசம்

அடுத்த மனிதனை நம்ப வைத்து ஏமாற்றுவதால், பாதிக்கப்படுபவனுக்கு ஏற்படும் அவமானம், வலி, மனக் கஷ்டம் போன்றவற்றினை, ஹக்கீம் ஒருபோதும் நினைத்துப் பார்ப்பதில்லை.  ஹக்கீமுக்கு தனது காரியம் முடிந்தால் சரி. அம்பாறை மாவட்ட மக்களின் பேச்சு வழக்கில் சொன்னால்; அந்த மனிதருக்கு கடுப்புக் கழன்றால் சரி. அதற்காக என்ன வாக்குறுதியையும் ஹக்கீம் கொடுப்பார், அதை நிறைவேற்ற முடியுமா – இல்லையா என்றெல்லாம் அவர் யோசிக்க மாட்டார்.

அப்படி மசூரை இன்னுமொரு முறையும் ஹக்கீம் வாக்குறுதியளித்து ஏமாற்றினார். அதற்கு இருவர் சாட்சியாகவும் இருந்தனர்.

ஊடவியலாளரிடம் கேட்ட உதவி

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவருக்கு, ஒருநாள் ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் ஹஸீர் தொலைபேசி அழைப்பெடுத்தார். “லீடர் (ஹக்கீம்) உங்களுக்கு பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தாராம் முடியவில்லையாம். அதனால், அவருக்கு உங்களை ஒரு ‘கோல்’ எடுக்கச் சொன்னார்” என்றார்.

“சரி” என்று சொன்ன அந்த ஊடகவியலாளர், ஹக்கீமுக்கு அழைப்பெடுத்தார்.

அப்போது, மிகவும் சோர்ந்து போன குரலில் பேசிய ஹக்கீம், அந்த ஊடகவியலாளரிடம்  ஓர் உதவி கோரினார்.

(தொடரும்)

முந்தைய பகுதியை வாசிப்பதற்கு: துரோகத்தின் கதை: மசூர் சின்னலெப்பையும், மு.கா. தலைவரும் (ஏமாற்றம்-01)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்