துரோகத்தின் கதை: மசூர் சின்னலெப்பையும், மு.கா. தலைவரும் (ஏமாற்றம்-01)

🕔 December 24, 2017

– மரைக்கார் –

ட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவேன் என்று, மு.காங்கிரஸ் தலைவர், கடந்த மூன்று பொதுத் தேர்தல்களில் வாக்குறுதியளித்திருந்தும், இற்றை வரை ஏமாற்றி வருகின்றமை குறித்து நாம் அறிவோம்.

அதாவது, கடந்த 15 வருட காலமாக மு.கா. தலைவர் அட்டாளைச்சேனை பிரதேசத்தை, மிக மோசமாக ஏமாற்றி வருகின்றார்.

இதன் மூலம், மிக மோசமாக ஏமாற்றப்பட்டு, அதன் மூலம் பாதிக்கப்பட்டவர் மர்ஹும் மசூர் சின்னலெப்பை ஆவார்.

ஹக்கீம் வாக்களித்த தேசியப்பட்டியல்

2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் காலத்தில், அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற ஒவ்வொரு பொதுக் கூட்டத்திலும், மசூர் சின்னலெப்பைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவேன் என்று, மு.கா. தலைவர் ஹக்கீம் பகிரங்கமாக கூறியிருந்தார். மசூர் சின்னலெப்பையின் பெயர் – தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வேட்புமனுவிலும் இடம்பெற்றிருந்தது.

மசூர் சின்னலெப்பையின் பெயர் – தேசியப்பட்டியல் வேட்புமனுவில் இடம்பெற்றிருப்பதாக, ஒருநாள் இரவு வானொலிச் செய்தியில் கூறப்பட்டபோது, அவரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்து, கொழுத்திய பட்டாசுச் சத்தம் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

அந்த பொதுத் தேர்தலில், ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில்தான், அம்பாறை மாவட்டத்தில் மு.கா. போட்டியிட்டது. எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம் மற்றும் எம்.ஐ.எம். மன்சூர் ஆகிய மூவரை மட்டும், அம்பாறை மாவட்டத்தில் தனது வேட்பாளர்களாக மு.காங்கிரஸ் களமிறக்கியிருந்தது.

மசூர் சின்னலெப்பைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படும் என்று, மு.கா. தலைவர் கூறியமையினை அடுத்து, மசூர் சின்னலெப்பையின் புகைப்படத்தை இட்டு, அவரின் தரப்பில் ஒரு சுவரொட்டி தயாரிக்கப்பட்டு, ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது. ‘எமது மண்ணின் நீண்ட நாள் கனவு, நனவாகிறது’ என்று, அந்த சுவரொட்டிக்கு, தலைப்பிடப்பட்டிருந்தது.

கானிவல் வீட்டு முற்றத்தில், கழிந்த நாள்

2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிந்த கையோடு, மசூர் சின்னலெப்பைக்கு வாக்களிக்கப்பட்ட தேசியப்பட்டியல் நடாளுமன்ற உறுப்பினர் பதவியை கேட்டுப் பெறுவதற்காக, அட்டாளைச்சேனையிலிருந்து மு.காங்கிரஸ் சார்பான முக்கியஸ்தர்களும், மசூர் சின்னலெப்பையின் முக்கிய ஆதரவாளர்கள் சிலருமாக கொழும்புக்கு பயணித்தனர். அப்போது மசூர் சின்னலெப்பை கொழும்பில் இருந்தார்.

ஊரிலிருந்து பயணித்தவர்களும், மசூர் சின்னலெப்பையும் மு.கா. தலைவரின் ‘கானிவல்’ ஐஸ் கிறீம் விற்பனை நிலையம் அமைந்துள்ள வீட்டு முற்றத்தில் சந்தித்தனர்.

அட்டாளைச்சேனையில் வந்திருந்தவர்களைப் போலவே, ஏராளமான கூட்டம் ‘கானிவல்’ வீட்டின் முற்றத்தில் நின்றிருந்தது. காத்தான்குடி, ஓட்டமாவடி உள்ளிட்ட பல ஊர்களைச் சேர்ந்தவர்களும் அவர்களில் உள்ளடக்கம். காத்தான்குடி முபீன் (இப்போது ரஊப் ஹக்கீமுடைய இணைப்புச் செயலாளர்) அழுத முகத்துடன் அங்கு நின்றிருந்தார். 2010ஆம் ஆண்டு முபீனும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், தோற்று விட்டார். அதனால், அவரும் தேசியப்பட்டியல் எம்.பி. கேட்டு வந்திருந்தார். “எம்.பி. தரா விட்டாலும், தேர்தலில் தான் செலவு செய்த 17 லட்சம் ரூபாய் பணத்தையாவது தலைவர் தர வேண்டும்” என்று முபீன் கூறிக் கொண்டிருந்தார். 17 லட்சம் ரூபாவை செலவு செய்தமையினை நிரூபிக்கும் வகையிலான ஃபைல் கட்டு ஒன்றினையும், முபீன் வைத்திருந்தார்.

மு.கா. தலைவரிடம் எம்.பி. கேட்டு வந்தவர்கள் அனைவரும் அவரின் ‘கானிவல்’ வீட்டு முற்றத்தில் காத்திருந்தனர். ஆனால், தலைவர் ஹக்கீம் வெளியே வரவேயில்லை. அவர் வீட்டுக்குள் இருக்கிறார் என்றுதான் பலரும் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், பின் வழியாக அவர் வெளியேறிச் சென்று விட்டார். அதனை மிகப் பிந்தியே பலரும் அறிந்து கொண்டனர்.

வெளியில் காத்து நின்றவர்கள் காலைச் சாப்பாடு, பகல் சாப்பாடு அனைத்தையும் அருகிலிருந்த கடைகளில் உட்கொண்டனர். மசூர் சின்னலெப்பையுடன் வந்தவர்களும் கடையில்தான் சாப்பிட்டார்கள். மசூர் சின்னலெப்பை எதுவும் சாப்பிடவில்லை. ‘கானிவல்’ முற்றத்தில் தரித்திருந்த தனது வாகனத்தினுள்ளேயே மசூர் சின்னலெப்பை இருந்தார். அட்டாளைச்சேனையில் வந்திருந்தவர்களில் ஒருவர், கடையில் ‘ரீ’ ஒன்றினை வாங்கி வந்து மசூர் சின்னலெப்பைக்கு கொடுக்க – குடித்தார். அதனைத் தவிர, அன்று முழுவதும் மசூர் சின்னலெப்பை வேறு எதுவும் சாப்பிடவில்லை.

அஸ்லமும், அல்லாஹ் மீது சத்தியமும்

பின்னேரம் 5.30 மணியானது. மு.கா. பொருளாளர் அஸ்லம் என்பவருக்கு தேசியப்பட்டியல் எம்.பி. வழங்கப்பட்டு விட்டதாக ஒரு கதை கசிந்தது. ஹக்கீமுக்காக வெளியில் காத்திருந்தவர்களின் முகத்தில் ஆத்திரம் கொப்பளித்தது. சிலர் சத்தமாகவே ஹக்கீமின் பெயரைச் சொல்லி தூஷணத்தில் திட்டிக் கொண்டிருந்தனர்.

இதன்போது, ‘கானிவல்’ வீட்டுக்கு ஒருவர் வந்திறங்கினார். அவர்தான் மு.கா. பொருளாளர் அஸ்லம் என்று – சிலர் சொன்னார்கள். அவருக்குத்தான் தேசியப்பட்டியல்  எம்.பி.யை ஹக்கீம் கொடுத்து விட்டாராம்.

உடனடியாக அங்கிருந்தவர்களில் அதிகமானோர் அஸ்லம் என்பவரைச் சுற்றிக் கொண்டனர். “எங்களுக்கு வாக்களிக்கப்பட்ட எம்.பி. பதவியை, நீங்கள் எப்படிப் பெறலாம்” என்று, மசூர் சின்னலெப்பையின் ஆதரவாளர்களில் ஒருவர் அஸ்லத்திடம் சத்தமாகக் கேட்டார். அதற்கு அஸ்ஸம்; “அல்லாஹ் மீது சத்தியமாக தேசியப்பட்டியல்  எம்.பி.  எனக்குத்தான் கிடைக்கும் என்று, கடைசிவரை எனக்குத் தெரியாது” என்றார். மு.கா. தலைவர் இப்படியொரு முடிவை எடுத்தமை குறித்து இறுதிவரை தனக்குத் தெரியாது என்றும்  அஸ்லம் கூறினார்.

இந்தக் கூத்தெல்லாம் நடந்து முடிந்த போது மாலையாகி விட்டது. அப்போது, மு.கா. தலைவர், ஒவ்வொரு ஊரிலிருந்தும் வந்தவர்களை சந்திப்பதற்காக வீட்டுக்குள் அழைப்பதாகச் சொன்னார்கள். மு.கா. தலைவர் எந்த வழியால் வெளியே போனார், எந்த வழியால் உள்ளே வந்தார் என்று, கடைசி வரை அப்போது அங்கிருந்தவர்களுக்குத் தெரியவில்லை.

சந்திப்பு

ஒவ்வொரு ஊரவர்களும் மு.கா. தலைவரைச் சென்று சந்தித்து விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். யாரின் முகத்திலும்ருமாறு சந்தோசம் இருக்கவில்லை. அப்போது, அட்டாளைச்சேனை ஆட்களை வருமாறு அறிவிக்கப்பட்டது. மசூர் சின்னலெப்பையுடன் அட்டாளைச்சேனையிலிருந்து வந்தவர்கள் அனைவரும் உள்ளே சென்றார்கள். மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை முக்கியஸ்தர்களான வாஹிட் மாஸ்டர், சட்டத்தரணி கபூர் ஆகியோரும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர்.

உள்ளே சென்றபோது, மு.கா. தலைவர் ஹக்கீம் ஒரு கதிரையில் உட்கார்ந்திருந்தார். அவரின் முகம் இறுகிப் போயிருந்தது. அட்டாளைச்சேனையிலிருந்து வந்தவர்களில் பெரியவர்கள் எவரும் பேசவில்லை. ஒரு சில நிமிடங்கள் மௌனம் குடிகொண்டிருந்தது. அந்த மௌனத்தை அங்கிருந்த ஒருவர் உடைத்தார். “சேர், தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை கேட்பதற்காக நாங்கள் இங்கு வரவில்லை. மசூர் சின்னலெப்பைக்கு நீங்கள் வாக்களித்த தேசியப்பட்டியல் எம்.பி.யை பெற்றுக் கொள்வதற்காகத்தான் நாங்கள் வந்திருக்கிறோம்” என்று, மௌனத்தை உடைத்தவர்  கூறினார். அப்படிக் கூறியவரை ஹக்கீம் நிமிந்து பார்த்தார். மௌனத்தை உடைத்தவர் தொடர்ந்தார்; “சேர், மசூர் சின்னலெப்பைக்கு தேசியப்பட்டியல் எம்.பி. தருவதாக, பொதுக்கூட்ட மேடைகளில், நீங்கள் வாக்களித்துள்ளீர்கள். அப்படி நீங்கள் சொன்னதை நாங்கள் ஒலிப்பதிவு செய்தும் வைத்திருக்கிறோம். எனது கைத்தொலைபேசியில் கூட அந்த ஒலிப்பதிவு இருக்கிறது” என்றார், மௌனத்தை உடைத்த அந்த நபர்.

அதைக் கேட்டதும் ஹக்கீமுடைய முகம் கோபத்தால் சிவந்தது. “நீங்கள் என்ன லோயர் மாதிரி பேசுறீங்க. நீங்கதான் ஊரைக் குழப்பிக் கூட்டி வந்திருக்கிறீங்க” என்று, மௌனத்தை உடைத்துப் பேசியவரின் முகத்தில் பாயாத குறையாக ஹக்கீம் சத்தமிட்டார்.

பின்னர், தன்னை அமைதிப் படுத்திக் கொண்ட மு.கா. தலைவர் இப்படிக் கூறினார்;

“மசூருக்கு எம்.பி. தருவதாக கூறியது எனது விரும்பமாகும். அது – என்னுடைய வாக்குறுதியல்ல”.

அங்கிருந்தவர்களின் தலைகளில் இடி இறங்கியது.

(தொடரும்)

Comments