அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய வீதி நிர்மாணத்தில் மோசடி; மக்கள் புகார்

🕔 November 3, 2017

– அஹமட் –

ட்டாளைச்சேனை அறபா வித்தியாலய வீதியினை கொங்றீட் வீதியாக நிர்மாணிக்கும் நடவடிக்கைகளில் பல்வேறு மோசடியான செயற்பாடுகள் இடம்பெறுவதோடு, பாரிய குறைபாடுகள் உள்ளதாகவும் அப்பகுதிய மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதி கொங்றீட் வீதியாக உள்ள நிலையில், அதனை காபட் வீதியாக மாற்றும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகிறது. வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதியில், இந்த வீதியினை அபிவிருத்தி செய்வதற்கான கொந்தராத்து, தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒரு வீதியினை நிர்மாணிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய முறைமைகள் இங்கு பின்பற்றப்படவில்லை என்றும், உரிய செயன்முறை மற்றும் தரங்களின் அடிப்படையில் இந்த வீதி நிர்மாண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், இந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

வீதியொன்றினை நிர்மாணிக்கும் போது, அது குறித்து பகிரங்கப்படுத்தும் பதாகையொன்று காட்சிப் படுத்தப்பட வேண்டும். ஆனால், அது மேற்கொள்ளப்படவில்லை. இதனால், இந்தத் திட்டம் குறித்தோ இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்தோ வெளிப்படைத்தன்மை இல்லாமல் உள்ளது.

மேலும், வீதியின் ஓரங்களில் இரண்டு அடிகளுக்கு மேற்பட்ட அகலத்தில் மூன்று அடி ஆழத்தில் மண்ணை தோண்டி எடுத்துள்ளவர்கள், அதனையடுத்து மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகளை மேற்கொள்ளாமலேயே (உதாரணமாக, கொம்பக்ற் பண்ணாமல்) அதனுள் சிறிய கருங்கற்களை கொட்டி நிரப்பியுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வீதியினை நிர்மாணிப்பவரால், இந்த வீதியின் சில இடங்களில் வடிகான்கள் அமைக்கப்படுகின்றன. ஆனாலும், இந்த வடிகான் நிர்மாணத்துக்கான சீமெந்து, கல் மற்றும் மண் ஆகியவை முறையாகக் கலவையிடப்படவில்லை என்றும், குறித்த வடிகான்கள் நேர்த்தியாக அமையவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், மேற்படி வீதி நிர்மாண நடவடிக்கையின் போது, பொதுமக்களின் சுகாதாரத்துக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் புழுதி ஏற்படாமல் தவிர்ப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளும் (பிரைம் கோட்  அமைத்தல்) இங்கு மேற்கொள்ளப்படவில்லை.

அதேவேளை, வீதி நிர்மாணத்தின் போது, சில இடங்களில் – குறித்த வீதி உடைந்து காணப்படுகின்ற போதும், அது குறித்து போக்குவரத்துச் செய்வோருக்கு தெரியப்படுத்தும் சமிக்ஞைகள் எவையும் உரிய இடத்தில் வைக்கப்படவில்லை.

மேலும், கடந்த இரண்டு நாட்களாக வீதி நிர்மாண வேலைகள் எவையும் இடம்பெறாத நிலையில், வீதி நிர்மாணத்துக்காக பயன்படுத்தப்பட்ட இயந்திரம் வீதியின் போக்குவரத்துக்குத் தடையாக அமையும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்தும், சம்பந்தப்பட்டோர் கவனமெடுக்கவில்லை.

இந்த முறை கேடுகள் தொடர்பில், வீதி அபிருத்தி திணைக்களத்தின் கல்முனை அலுவலக பொறியியலாளருக்கு இப் பகுதி மக்கள் தெரியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்