கொழும்பை பாதுகாக்க, இலவச தொலைபேசி இலக்கம்

🕔 May 26, 2015

222கொழும்பு நகரிலும், அதனை அண்டிய பிரதேசங்களிலும் குப்பைகளை கொட்டி, அசுத்தப்படுத்துவோர் குறித்து – உடனடியாக தகவல் தெரிவிப்பதற்காக, இலவச தொலைபேசி இலக்கமொன்றை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக – நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம்  கூறினார்.

இதேவேளை, இதுதொடர்பில் வாரந்தோறும் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் பற்றி, தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு, அவர் – பணிப்புரை விடுத்தார்.

கொழும்பு நகர், அதனை அண்டிய பிரதேசங்களிலுள்ள நிலப்பகுதிகளையும், கால்வாய்களையும், ஏனைய நீர் நிலைகளையும் சுத்தமாக வைத்திருப்பதோடு, நகரை அழகுபடுத்துவது தொடர்பிலான விஷேட கலந்துரையாடலொன்று, இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே, அமைச்சர் ஹக்கீம் மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.

இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;

“நகர அபிவிருத்தி அதிகார சபையை முதன்மைப்படுத்தி – இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனமும், கொழும்பு, தெகிவளை கல்கிசை, கோட்டே உள்ளுராட்சி சபைகளும் இணைந்து, தமது பிரதேசங்கள் – குப்பை கூழன்களால் அசுத்தப்படுவதை தடுப்பதற்கு கடந்த காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளில் தேக்கநிலை காணப்படுவதாக குறை கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டினை முற்றாக நிராகரித்து விட முடியாது.  அதிகாரிகளின் தரப்பில் ஏற்பட்ட கவனயீனம், மற்றும் அவர்களின் அசிரத்தை காரணமாகத்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மேற்படி விடயத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தலையிட்டு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கொழும்பிலும், அண்டிய பிரதேசங்களிலும் கால்வாய்கள் உட்பட நீர் நிலைகள் அசுத்தமடைவதற்கு – பொலிதீன் உறைகளும், அசேதன பொருட்களும் அங்கு வீசியெறியப்படுவதுதான் பிரதான காரணமாகும். இவ்வாறான செயல்களை தீவிரமாக கண்காணிப்பதற்கு சுற்றாடலைப் பேணும் பொலீஸாரின் ஈடுபாடும், சுத்தப்படுத்தலை மேற்கொள்ளும் சிவில் பாதுகாப்பு பிரிவினரின் ஒத்துழைப்பும் இன்றியமையாதவையாகும்.

சேவை செய்வதற்காகவே புதிய அரசாங்கத்திற்கு – மக்களின் ஆணை கிடைத்திருக்கின்றது. ஆகையால் அரச ஊழியர்கள் நகரையும், சுற்றாடலையும் சுத்தமாக வைத்திருப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சில நாட்களுக்குள் சட்டம் மற்றும் ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் சம்பந்தப்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் போன்றோருடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி சில முடிவுகளை மேற்கொள்ள உள்ளேன்’ என்றார்.

இக் கலந்துரையாடலில் இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான், பணிப்பாளர் நவீன் அதிகாரி, பொது முகாமையாளர் ஸ்ரீமதி சேனாதீர, பிரதி பொது முகாமையாளர் எஸ்.பீ. முத்துமால மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் செயலாற்றுப் பணிப்பாளர் கிர்ஷான் கருணாரத்ன உட்பட உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்