முஸ்லிம் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு அபாண்டங்களைச் சுமத்தாதீர்கள்; பள்ளிவாசல் ஒன்றிலிருந்து ஹக்கீமுக்கு கடிதம்

🕔 July 14, 2017

 

வுனியா சின்னச் சிப்பிக்குளம் கிராமத்துக்கு மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் வருகை தரும்போது, எவ்விதமான ஆதரவையும் வழங்கக் கூடாதென அமைச்சர் ஒருவர், பள்ளிவாசல் நிருவாகத்தை அச்சுறுத்தி இருந்ததாகவும், குறிப்பாக பள்ளிவாசல் தலைவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாகவும், மு.காங்கிரசின் தலைவர், நேற்று தெரிவித்திருந்த நிலையில்; தம்மை யாரும் அப்படி அச்சுறுத்தவில்லை என, குறித்த பள்ளிவாசல் தலைவர் தெரிவித்துள்ளார்.

மு.கா. தலைவருக்கு, குறித்த பள்ளிவாசலின் தலைவர் எழுதியனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த மறுப்பினை வெளியிட்டுள்ளார்.

சின்னச்சிப்பிக்குளம் பள்ளி பரிபாலனசபைத் தலைவர் டி.எம். இம்தியாஸ் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

சின்னச்சிப்பிக்குளம் கிராமத்துக்கு கௌரவ அமைச்சராகிய நீங்கள், கடந்த 12ஆம் திகதி வருகைதந்து நிகழ்வொன்றில் கலந்து கொண்டீர்கள். பின்னர், வேறொரு கிராமத்துக்குச் சென்று, அங்கே எமது கிராமத்தின் பள்ளிவாசல் நிர்வாகத்தையும் அமைச்சர் ஒருவரையும்  சம்பந்தப்படுத்தி, நீங்கள் வெளியிட்ட பிழையான கருத்து, எமக்கு மனவேதனையையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம் கட்சியொன்றில் தலைவராகிய நீங்கள், இவ்வாறான பொறுப்பற்ற கருத்தொன்றை எந்தவிதமான அடிப்படைகளுமின்றி வெளியிட்டிருப்பது வேதனையானது. எமது பள்ளிவாசல் நிர்வாகத்தை அகௌரவப்படுத்துவதாகவும் பள்ளி நிர்வாகத்தின் சுயாதீனமான நடவடிக்கைக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் எமது செயற்பாடுகளை மலினப்படுத்துவாதாகவும் உங்களது கருத்து அமைந்துள்ளது.

எமது கிராமத்துக்கு அமைச்சர் ஹக்கீம் வருகை  தரும்போது அதற்கு    எந்தவிதமான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கக் கூடாதென, அமைச்சர் ஒருவர் எங்களை அச்சுறுத்தி இருந்ததாகவும், குறிப்பாக பள்ளிவாசல் தலைவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாகவும் நீங்கள் குற்றஞ்சாட்டியுள்ளீர்கள். வன்னி மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் மீதே இந்த அபாண்டங்களை சுமத்தியுள்ளீர்கள் என்பது உங்கள் பேச்சில் இருந்து விளங்குகின்றது. உங்களது வருகை தொடர்பாக அமைச்சர் றிஷாட் பதியுதீன், எங்களுடன் எந்த விடயமும் பேசவில்லை.  எனவே முஸ்லிமாக இருந்து கொண்டு இன்னொரு முஸ்லிம் மீது வீண்பழி சுமத்தாதீர்கள்.

அரசியல் ரீதியில் உங்களுக்கும் அமைச்சர் றிஷாட்டுக்கும் இடையிலான போட்டியில் எமது கிராமத்தின் பள்ளி நிர்வாகத்தை சம்பந்தப்படுத்தி இருப்பது கவலையானது. இந்த விடயத்தில் எங்களை நீங்கள் பலிக்கடாவாக்கியுள்ளீர்கள்.

தொடர்பான செய்தி: முஸ்லிம் கூட்டமைப்பு; காங்கிரசுக்கு ஒரு போதும் சவால் விட முடியாது: ஹக்கீம் தெரிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்