
தனது கணவர் நிரபராதி என்றும், அவர் அநியாயமாக ஒரு ‘பலியாடாக்கப்படுகிறார்’ என்றும் – அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயின் மனைவி மனோரி சாலே தெரிலித்தார்.
தனது வாழ்நாளின் பல தசாப்தங்களை தேசிய சேவைக்காக அர்ப்பணித்த ஒரு அரச ஊழியருக்கு அநீதியானதும் மனிதாபிமானமற்றதுமான தண்டனைகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
தனது கணவரை இன்று (07) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தனது கணவரைச் சந்தித்த பிறகு ஊடகங்களிடம் பேசும் போதே, மேற்கண்ட விடயங்களைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்;
தனது கணவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், அவர் கடுமையான அநீதிக்கு உள்ளாக்கப்படுகிறார் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கும், தனக்கு இழைக்கப்படும் அநியாயத்துக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தனது கணவர் தடுப்புக்காவலில் இருக்கும்போதே சாகும்வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளார் என்றும் மனோரி சாலே மேலும் தெரிவித்தார்.
உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு குடும்ப உறுப்பினர்கள் பலமுறை அவரை சமாதானப்படுத்த முயன்றபோதிலும், அவர் தனது நிரபராதித் தன்மையை நிலைநாட்டி, அழுத்தங்களுக்குப் பணிய மறுத்து, தனது போராட்டத்தைத் தொடர உறுதியாக இருக்கிறார் என்று அவர் கூறினார்.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே 38 ஆண்டுகள் நாட்டிற்குச் சேவை செய்துள்ளார் என்றும், தனது தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையை விட, நாட்டுக்கான கடமைக்கு அவர் அடிக்கடி முன்னுரிமை அளித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசியப் பாதுகாப்பில் அவருக்கு இருந்த கடினமான பொறுப்புகளால், தன் பிள்ளைகளின் பாடசாலை நிகழ்ச்சிகள் உட்பட முக்கியமான குடும்ப நிகழ்வுகளில் அவரால் அடிக்கடி கலந்துகொள்ள முடியாமல் போனதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அவரது உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்துக் கவலை தெரிவித்த சுரேஷ் சாலேயின் மனைவி; நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன்பு அவரை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.
அவரது தற்போதைய மனநிலையையும், உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் கொண்டுள்ள உறுதியையும் கருத்தில் கொண்டு, அவர் தானாக வைத்திய உதவியைக் கோருவதற்கு வாய்ப்பில்லை எனவும், எனவே அவரின் நலனைப் பாதுகாப்பது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


