தலைப்புச் செய்திகள்

வாகன இலக்கத் தகடு அச்சிடுவதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானது

வாகன இலகத் தகடுகளை அச்சிடுவதை தனியார் நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம் இன்று (10) கையெழுத்தானது. இதற்காக, 03 பில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறது.

அமைச்சரவையின் அனுமதி மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் நீண்ட கொள்முதல் செயல்முறைக்குப் பிறகு ஐந்து வருட ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக, ஊடகங்களுக்கு பேட்டியளித்த மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்தார்.

“ஒப்பந்தத்தின்படி, நிறுவனம் மூன்று மாதங்களுக்குள் உற்பத்தியைத் தொடங்க வேண்டும். இருப்பினும், தற்போதைய கோரிக்கையை கருத்தில் கொண்டு, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் செயல்பாடுகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனவும் அவர் கூறினார்.

இலக்கத் தகடுகளை அச்சிடும் பணி – கிட்டத்தட்ட பத்து மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், ஒரு பெரிய பணித் தேக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.

ஏப்ரல் மாத இறுதிக்குள் அல்லது மே முதல் வாரத்தில் இலக்கத் தகடு அச்சிடும் பணி மீண்டும் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.