
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட ஆறாம் வகுப்பு ஆங்கில மொழி பாடப் புத்தகத்தில் பொருத்தமற்ற குறிப்புகள் இருப்பதாகக் கூறப்படும் சர்ச்சை குறித்து, அரசாங்கத்துடன் விவாதிக்க எதுவும் இல்லை என்று – பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) ஏற்பாடு செய்த பௌத்த மத பிரசங்கத்தில் பங்கேற்ற பிறகு ஊடகங்களுக்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ; “சர்ச்சைக்குரிய உள்ளடக்கத்தை பாடப் புத்தகத்தில் சொருகுவதற்கு யார் பொறுப்பு என்பதை பிரதமரும் சம்பந்தப்பட்ட பாட அமைச்சரும் அறிந்துள்ளனர்” என, குற்றம் சாட்டினார்.

மேலும் ஆறாம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் தவறான விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளதை இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
“பொதுஜன பெரமுன என்ற முறையில், இலங்கை கலாச்சாரத்தை சேதப்படுத்தும் முயற்சிகளை நாங்கள் எதிர்த்தோம். மேலும் நமது நாட்டிற்குப் பொருந்தாத கல்வி சீர்திருத்தங்கள் தேவையற்றவை என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம்” எனவும் அவர் கூறினார்.
“வெளிநாடுகளிலிருந்து நகலெடுக்கப்பட்ட சீர்திருத்தங்கள் அல்ல, நமது சொந்த சமூக மற்றும் கலாச்சார சூழலுக்கு ஏற்ற கல்வி சீர்திருத்தங்கள்தான் இலங்கைக்குத் தேவை” எனவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய கல்வி சீர்திருத்தங்கள் மீதான விமர்சனங்களைத் தொடர்ந்து, அரசாங்கம் அவற்றை செயல்படுத்துவதில் தோல்வியடைந்ததாகக் கூறி, தற்போதைய அரசாங்கம் முந்தைய நிர்வாகத்தின் மீது பழியை மாற்றுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டினார்.
இருப்பினும், பொதுஜன பெரமுன மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், தேசிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட பொருத்தமான கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.


