தலைப்புச் செய்திகள்

12 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி ஆரம்பம்: 10 வேட்பாளர்கள் கைது

உள்ளூராட்சித் தேர்தலின் பொருட்டு, 12 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணியை அரச அச்சுத் திணைக்களம் தொடங்கியுள்ளது.

வேட்புமனு தாக்கல் முடிந்த 12 மாவட்டங்களிலிருந்து – தேவையான தகவல்களை அலுவலகம் பெற்றுள்ளதாக அரச அச்சகர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள மாவட்டங்களிலிருந்து தரவுகள் – எதிர்வரும் நாட்களில் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வாக்குச் சீட்டுகளுக்கு மேலதிகமாக, வாக்குச் சீட்டுகள், தபால் வாக்குச் சீட்டுகள் மற்றும் அதிகாரப்பூர்வ தேர்தல் அறிவிப்புகளையும் அச்சுத் திணைக்களம் அச்சிடத் தொடங்கியுள்ளது.

தேர்தல் தொடர்பான அனைத்து அச்சிடும் பணிகளும் ஏப்ரல் 28 ஆம் திகதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணிச்சுமை காரணமாக, சரியான நேரத்தில் முடிப்பதை உறுதி செய்வதற்காக அரச அச்சகத் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பான தேர்தல் சட்டங்களை மீறியதற்காக 32 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களில் 10 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இன்று (24) நடைபெற்ற ஒரு ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும், தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தைப் பராமரிக்க அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.