தலைப்புச் செய்திகள்

அர்ச்சுனா எம்பிக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல்: VIP விளக்கால் வந்த வினை

னுராதபுரம் – ரம்பேவ பகுதியில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் மீது சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

அங்கீகரிக்கப்படாத விஐபி (VIP) விளக்குகள் பொருத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை போக்குவரத்துப் பொலிஸார் தடுத்து நிறுத்தியபோது இந்த சம்பவம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில், பொலிஸாரின் கடமைகளுக்கு ஒத்துழைக்க நாடாளுமன்ற உறுப்பினர் மறுக்கின்றார்.

சம்பவத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் கூறிய சில கருத்துக்கள் குறித்தும் பொலிஸார விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அவை சமூகங்களுக்கிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலானவையா என மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

வீடியோவில், “நாங்கள் விஐபி இல்லையா?” என்று கேட்கும் நாடாளுமன்ற உறுப்பினர், தனக்கு – ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஒத்த சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.