டொக்டர் ஷாபி கட்டாய கருத்தடை செய்தார் என, நான் ஒருபோதும் குற்றம்சாட்டவில்லை: விமல் வீரசன்ச தெரிவிப்பு

🕔 May 29, 2024

குருநாகல் வைத்தியசாலையின் டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன் – பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்தார் என தான் குற்றம்சாட்டியதாகக் கூறப்படுகின்றமையை, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மறுத்துள்ளார்.

ஒரு மக்கள் பிரதிநிதி என்ற ரீதியில் இந்த விடயம் தொடர்பில் தான் கவலைகளை எழுப்பி, விசாரணை நடத்துமாறுதான் – தாம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

“டொக்டர் ஷாபிக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் குற்றச்சாட்டுகளை எழுப்பவில்லை. அப்போதைய வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சில தாய்மார்களே இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். தாய்மார்கள் வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் புகார் அளித்தனர், அவர் உத்தியோபூர்வமாக முறையிட்டார். அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் டொக்டர் ஷாபி கைது செய்யப்பட்டார்” என்றும் விமல் வீரவன்ச கூறினார்.

மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் தானும் தனது குழுவினரும் – உண்மையைக் கண்டறியும் பொருட்டு வைத்தியசாலைக்கு விஜயம் செய்ததாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் வீரவன்ச, ”இது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட தாய்மார்களிடம் வினவினோம்” என்றார்.

வைத்தியசாலைப் பணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட தாய்மார்களின் அறிக்கைகளின் அடிப்படையில், இந்த விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஊடகங்களுக்கு தாம் அறிக்கையொன்றை விடுத்ததாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் குறிப்பிட்டார்.

“டொக்டர் குற்றவாளியா இல்லையா என்பதை முடிவு செய்ய எங்களுக்கு உரிமை இல்லை. நாங்கள் நிபுணர்கள் அல்ல. உத்தியோகபூர்வ அதிகாரிகளின் கோரிக்கைகளை விசாரிக்க, பொதுப் பிரதிநிதிகளாக மட்டுமே எங்களுக்கு உரிமை உள்ளது” என்று அவர் விளக்கினார்.

கட்டாய கருத்தடை விவகாரம் தொடர்பான விசாரணைகள் முடிவடையவில்லை என்று கூறிய விமல் வீரவன்ச, குற்றச்சாட்டுகள் உண்மையா இல்லையா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை என்றும், டொக்டர் ஷாபியும் வைத்தியசாலையில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார்.

அண்மையில் தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது விமல் வீரவன்ச இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

பெண்களின் அனுமதியின் அவர்களுக்கு கருத்தடை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் டொக்டர் ஷாபி 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு கட்டாய விடுமுறையும் வழங்கப்பட்டது. மேலும் அவர் சட்டவிரோதமாக சொத்து குவித்ததாகவும், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் – அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் எவையும் நிரூபிக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து, டொக்டர் ஷாபி சிஹாப்தீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்