இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் தொடர்பில், பொய் தகவல் வெளியிட்ட விரிவுரையாளர் கைது

🕔 May 29, 2024

ந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பின் உறுப்பினர்கள் எனக் கூறப்படுவோர் தொடர்பில், ஊடகங்களுக்கு பொய்யான அறிக்கைகளை வழங்கியமைக்காாக, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில், வாக்குமூலம் பதிவு செய்வதற்காக – குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட கலாநிதி புன்சர அமரசிங்க, நேற்று (28) கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 20ஆம் திகதியன்று, ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், நான்கு இலங்கையர்கள் – குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையில், மேற்படி நபர்களுக்கு புனர்வாழ்வு வழங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்ததாக, கைது செய்யப்பட்ட விரிவுரையாளர் ஊடகப் பேட்டிகளில் கூறியிருந்தார்.

இருந்தபோதிலும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, ​​குறித்த விரிவுரையாளர் உரிய விபரங்களை தான் அறியவில்லை என ஒப்புக்கொண்டமையை அடுத்து – கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிதிருந்தார்.

இதேவேளை, இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர்கள் எனக் கூறப்படுகின்றவர்களுடன், தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் மேலும் இருவரை – சிலாபம், பங்கதெனிய பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சேர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி புன்சர அமரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், 10 லட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்