வற் வரி அதிகரிப்பு, மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பில் சஜித் கடும் சாடல்

🕔 November 1, 2023

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) மற்றும் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை தீர்மானங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார்.

2024 ஜனவரியில் இருந்து பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை (VAT) 18% ஆக அதிகரிப்பதற்கும், 03 மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணங்களைத் திருத்துவதற்கும் அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

வற் வரியை அதிகரிப்பது என்பது சாமானிய மக்கள், குறிப்பாக ஏழைகள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் மீது சுமத்தப்படும் ஒரு பிற்போக்கு வரி அதிகரிப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் பலவீனமான நிர்வாகத்தைக் கொண்டுள்ளதாகவும் வரி வருவாயை தவறாக நிர்வகிப்பதாக குற்றம் சாட்டிய சஜித் பிரேமதாச, மக்கள் மீது அதிக வரிகளை சுமத்துவதை விடவும், வரி நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் வரி ஏய்ப்பு ஆகிய விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

இந்த விடயங்களில் மக்கள் கருத்து தெரிவிப்பதற்கு உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

அடிக்கடி மின்சாரக் கட்டணத் திருத்தங்களை நியாயப்படுத்துவதற்காக – அரசாங்கம் பொய்யான தரவுகளை முன்வைப்பதாகவும், இது சுமையாகவும் மக்களுக்கு எதிரான அநீதியான செயலாக உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவுகளுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்றும், மக்கள் விரோத தீர்மானங்களாகக இவை கருதப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: ‘வற்’ வரியை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்