14 வகையான தொழில் துறையினர், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்வதை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

🕔 June 1, 2023

நாட்டிலுள்ள14 வகை தொழில் துறையினர் – உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் இன்று (01) முதல் தம்மைப் பதிவு செய்துகொள்வதை கட்டாயமாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் மே 31 ஆம் திகதி, 2017ஆம் ஆண்டின் உள்நாட்டு இறைவரிச் சட்டம் 24 இன் 102வது பிரிவு 102 இன் உப பிரிவு 03 இன் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

வர்த்தமானி அறிவிப்பின்படி, ஊழியர் சேமலாப நிதிக்கு மாதாந்தம். 20 ஆயிரம் ரூபாவுக்கு (ஊழியர் மற்றும் முதலாளி இருவரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளும் தொகை) அதிகம் செலுத்தும் ஊழியர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அதன்படி, பின்வரும் 14 வகைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் இன்று (ஜூன் 01) முதல் தங்களைப் பதிவு செய்துகொள்வதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது:

  1. இலங்கை மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட வைத்தியர்கள்
  2. இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தின் உறுப்பினர்கள்
  3. இலங்கையின் சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகத்தின் உறுப்பினர்கள்
  4. இலங்கை பொறியியல் நிறுவனத்தின் உறுப்பினர்கள்
  5. தொழில்முறை வங்கியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள்
  6. இலங்கை கட்டிடக்கலை நிறுவகத்தின் உறுப்பினர்கள்
  7. இலங்கையின் அளவு ஆய்வாளர்கள் (Quantity Surveyors) நிறுவனத்தின் உறுப்பினர்கள்
  8. இலங்கை உச்ச நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள்
  9. பிரதேச செயலகங்களில் தமது தொழில்களை பதிவு செய்த நபர்கள்
  10. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை (முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கை உழவு இயந்திரங்கள் தவிர) வைத்திருக்கும் நபர்கள்
  11. ஏப்ரல் 01, 2018 அன்று அல்லது அதற்குப் பிறகு இலங்கையில் ஏதேனும் அசையாச் சொத்தை பத்திரப் பரிமாற்றத்தின் மூலம் வாங்கிய நபர்கள்
  12. ஊழியர் சேமலாப நிதிக்கு மாதாந்தம். 20 ஆயிரம் ரூபாவுக்கு (ஊழியர் மற்றும் முதலாளி இருவரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளும் தொகை) அதிகம் செலுத்தும் ஊழியர்கள்
  13. உள்ளூர் அதிகாரசபையிடமிருந்து கட்டிடத் திட்டத்திற்கான அனுமதியைப் பெறும் தனிநபர்கள்
  14. மாதம் 100,000 ரூபா அல்லது வருடத்துக்கு 12 லட்சம் ரூபா ஊழியம் பெறுவோர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்