பேராளர் மாநாட்டுக்கு எதிரான மனு நிராகரிக்கப்படவில்லை, ஒத்திவைக்கப்பட்டுள்ளது; விளக்கம் தருகிறார் வை.எல்.எஸ். ஹமீட்

🕔 January 22, 2016
YLS. Hameed - 0989கில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு மற்றும் அங்கு நிறைவேற்றப்பட்ட புதிய நியமனங்கள் ஆகியவற்றினை ஆட்சேபித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்படவில்லை என்று அந்தக் கட்சியின் சட்டபூர்வ செயலாளர் எனத் தெரிவித்துக் கொள்ளும் மனுதாரர் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த மனு எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட மேற்படி மனு, நேற்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அத்துடன், கட்சியால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் புதிய செயலாளர் தேர்தல்கள் திணைக்களத்தினால் இன்னும் ஏற்றுக்கொள்ளபடவில்லை எனவும் வை.எல்.எஸ்.ஹமீட் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 2005 ஆம் ஆண்டு சட்டரீதியாக என்னால் ஆரம்பிக்கப்பட்டது. இக்கட்சியில் 2011 ஆம் ஆண்டிலேயே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இணைந்து தலைவரானார்.

இந்நிலையில் கடந்த 16 ஆம் திகதி பொய்யாக பேராளர் மாநாடு நடத்தப்பட்டது. அதற்கு முந்திய தினமான வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி பொங்கல் விடுமுறையாக இருந்தது. அடுத்து வந்த இரு நாட்களும் வார இறுதி விடுமுறை நாட்களாகவிருந்தன. அதனால் அம் மாநாட்டிற்கான அறிவித்தலானது 14 ஆம் திகதியே விளம்பரங்கள் மூலம் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டன. இது தடை உத்தரவை பெறாமல் இருப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட கபடத்தனமான செயற்பாடொன்றாகும்.

ஒரு பேராளர் மாநாட்டிற்கு 900 பேரை ஒன்று சேர்ப்பது ஆச்சரியமான விடயமல்ல. அவ்வாறு வருகின்றவர்கள் அனைவரும் பேராளர்களாகிவிட முடியாது. பேராளர்களை நியமிப்பதற்கு விதிமுறைகள் இருக்கின்றன. இப் பேராளர் மாநாடு கூட்டப்பட்டிருப்பது சட்டத்திற்கு விரோதமானதாகும். இவற்றை நான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

அதனடிப்படையில் நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட மனு, எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் திகதி விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த வழக்கு தொடர்பிலான அறிவித்தல் சகல பிரதிவாதிகளுக்கும் அனுப்பப் பட்டுள்ளது.

இதனிடையே, சதியை அரசியலாக மேற்கொள்ளும் சிலர், புதிய செயலாளர் தொடர்ந்தும் இயங்க முடியும் என அறிவித்துள்ளனர்.

எனினும் புதிய செயலாளரை தேர்தல்கள் ஆணையாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் இது குறித்து நீதிபதி எந்த உத்தரவையும் வழங்கவில்லை” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்