நாட்டிலுள்ள 4910 மதுபானக் கடைகளில், 02 ஆயிரம் கடைகள் தற்போதைய மற்றும் முன்னாள் எம்.பிமாருக்கு சொந்தமானவை
நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 4,910 மதுபானக் கடைகளில் தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2,000 மதுபானக் கடைகள் சொந்தமாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள் மதுபான வியாபாரிகளாகவும் போதைப்பொருள் வியாபாரிகளாகவும் மாறியுள்ளதாக நேற்று (26) செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் கூறினார்.
எனவே, பாடசாலை மாணவர்களின் பைகளை சோதனை செய்வதற்கு பதிலாக, போதைப்பொருள் வியாபாரிகளின் வீடுகளை அதிகாரிகள் சோதிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களின் பெயர்களை வெளியிட ஒருபோதும் தயங்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
“நான் இந்த பாவத்தில் ஈடுபடவில்லை. இந்த தகவல்கள் அனைத்தையும் சரியான நேரத்தில் வெளிப்படுத்துவேன். ஊடக நிறுவனங்கள் மற்றும் புலனாய்வு ஊடகவியலாளர்கள் என்ற வகையில், நான் தவறாக இருந்தால் என்னைத் திருத்துமாறு உங்களை அழைக்கிறேன். இல்லையெனில், இந்தத் தகவலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்த உங்களுடன் இணைவேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.