உள்ளூராட்சி தேர்தலுக்கான ‘மை’யை, இந்திய கடனில் கொள்வனவு செய்ய யோசனை

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியா வழங்கும் கடன் வசதியின் கீழ், உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான விரல் பூச்சு மையினை இறக்குமதி செய்வது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
அதற்கு முன்னர் தற்போது ஆணைக்குழு வசம் உள்ள மை காலாவதியாகி விட்டதா என பரிசோதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏற்கனவே அரச ரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் அறிக்கை கோரியுள்ளதாக – ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள மை கையிருப்பு – தேர்தலை நடத்த போதுமானதாக இல்லாததால், கட்டாயமாக இறக்குமதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா கூறியுள்ளார்.
இந்த நிலையில், விரல் பூச்சு மையை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் தற்போதைய எல்லை நிர்ணய குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய குறிப்பிடடுள்ளார்.
முந்தைய ஆண்டுகளில் அவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும், கடைசியாக 2020 ஆம் ஆண்டு தேர்தலுக்காக குறித்த விரல் பூச்சு மை, உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியினை அடுத்து, இலங்கை மக்களுக்கு தேவையான எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியா 500 மில்லியன் டொலர் கடன் வசதியை வழங்கியது.
பின்னர், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, உணவு, மருந்து, ஏற்றுமதி தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் மற்றும் வேறு சில பொருட்களை வாங்குவதற்கு மேலும் ஒரு பில்லியன் டொலர் வழங்கப்பட்டது.