மாலைதீவு முன்னாள் ஜனாதிபதிக்கு 11 வருட சிறைத் தண்டனை; 182 கோடி ரூபா அபராதம்: லஞ்ச வழக்கில் தீர்ப்பு

🕔 December 26, 2022

மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்நாட்டின் குற்றவியல் நீதிமன்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீா்ப்பளித்தது.

லஞ்சம் மற்றும் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அவருக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலா் (இலங்கை பெறுமதியில் 182 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மாலைத்தீவு ஜனாதிபதியாக 2013 முதல் 2018 வரை பதவி வகித்தவரான அப்துல்லா யாமீன், அரசுக்கு சொந்தமான தீவு ஒன்றை குத்தகைக்கு வழங்க லஞ்சம் பெற்றாதக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அவா் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்த குற்றவியல் நீதிமன்றம், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை குற்றத்துக்கு 7 ஆண்டுகள், லஞ்சம் பெற்ற குற்றத்துக்கு 4 ஆண்டுகள் என மொத்தம் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது.

அப்துல்லா யாமீனுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுவது இது முதல்முறையல்ல. 2019 இல் அரசுப் பணத்தை சொந்த ஆதாயத்துக்கு பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டாா். ஆனால், அவருக்கு எதிரான ஆதாரங்களில் குறைபாடுகள் உள்ளதாகவும், குற்றச்சாட்டுகள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறி, 2 ஆண்டுகளுக்கு பிறகு அந்த தீா்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மாலைத்தீவு ஜனாதிபதி தோ்தலில் போட்டியிட்ட அப்துல்லா யாமீன், தற்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலியிடம் தோல்விகண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்