புலம்பெயர் தொழிலாளர் தொடர்பான கொள்கை, சட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை: சுவாட் நிறுவன தலைவர் தெரிவிப்பு

– முன்ஸிப் –
புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான கொள்கைகள் மற்றும் சட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத நிலையொன்று நாட்டில் உள்ளதாக, சுவாட் (SWOAD) அமைப்பின் தலைவர் வி. பரமசிவம் தெரிவித்தார்.
புலம் பெயர் தொழிலாளர் குடும்பங்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் – இவ்விடயம் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அக்கரைப்பற்றிலுள்ள சுவாட் நிறுவன காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
முன்னர் 05 வயதுக்குட்பட்ட குழந்தையுடைய தாய் ஒருவர், வேலை வாய்ப்பின் பொருட்டு வெளிநாடு செல்ல முடியாத நிலையொன்று இருந்ததாகவும், தற்போது அந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், இந்த நிலையை வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் முகவர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இதேவேளை, கணிசமான சந்தர்ப்பங்களில் – வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுடன் இலங்கையில் செய்யப்படும் உடன்படிக்கையில் குறிப்பிடப்படும் சம்பளத்தை விடவும் குறைவான தொகையே, அவர்கள் செல்லும் நாட்டில் வைத்துச் கைச்சாத்திடப்படும் உடன்படிக்கையில் குறிப்பிடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பத்தவர்களிடமிருந்து இவ்வாறான முறைப்பாடுகளை தாம் பெற்றுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
சமூக நலன்களை மேம்படுத்துவது தொடர்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சுவாட் அமைப்பு, புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும் சட்ட ரீதியாக போராடி வருகின்றது.
புலம் பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் போது, – அது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், வெளிவிவகார அமைச்சு மற்றும் தொடர்புபட்ட நிறுவனங்களினூடாக நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக சுவாட் அமைப்பு செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றவர்களில் பலருக்கு உரிய சம்பளம் கொடுக்கப்படுவதில்லை என்றும், அவர்கள் அதிக நேரம் வேலையில் ஈடுபட வற்புறுத்தப்பட்டு, உழைப்புச் சுரண்டப்படுவதாகவும் பரமசிவம் கூறினார்.
சுமார் 40 ஆயிரம் பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்
சுவாட் அமைப்பின் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் கே. பிரேமலதன் இங்கு பேசுகையில்; ” 2021 பெப்ரவரி மாத நிலைவரப்படி, கொவிட் பாதிப்பின் காரணமாக இலங்கையைச் சேர்ந்த 39,641 புலம்பெயர் தொழிலாளர்கள், வெளிநாடுகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்கள்” என்றார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு கிடைத்த தரவுகள் இதனை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் – தொழிற்சாலைகள் மூடப்பட்டமையினால் தொழிலை இழந்தோர், சம்பளம் வழங்கப்படாதோர், முழுச் சம்பளம் கிடைக்காதோர் எனப் பலர் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட மேற்படி தொழிலாளர்களில் பலர், தமது சொந்தப் பணத்தை செலவிட்டு, அல்லது நண்பர்களின் உதவியுடன் நாடு திரும்பியதாகவும் தெரிவித்தார்.
“வெளிநாடொன்றுக்கு வேலைவாய்ப்பு பெற்று செல்லும் ஒருவர், அங்கு தொழில் தருநரால் ஏமாற்றப்பட்டால், அங்கிருந்தவாறுதான் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். பாதிக்கப்பட்ட தொழிலாளர் நாடு திரும்பிய பின்னர், தனது வெளிநாட்டுத் தொழில் தருநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியாது. இது புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பாதகமான நிலையாகும்” என்றும் கூறினார்.
“வெளிநாட்டில் தொழிலை இழந்த, சம்பளம் கிடைக்கப் பெறாத ஒரு புலம்பெயர் தொழிலாளர் – அங்குள்ள தொழில் தருநருக்கு எதிராக எவ்வாறு அங்கிருந்து கொண்டு, பணத்தை செலவு செய்து சட்ட நடவடிக்கை எடுப்பது?” எனவும் கேள்வியெழுப்பினார்.
எனவே, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுச் செல்வோரின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான கொள்கைளும், சட்டங்களும் மேலும் வலுவாக்கப்பட வேண்டுமென்றும் இதன் போது அவர் வலியுறுத்தினார்.
இந்த ஊடக சந்திப்பின் போது, வெளிநாட்டில் சம்பளம் வழங்கப்படாத நிலையில், தொழிலிழந்து தமது நண்பர்களின் உதவியுடன் நாடு திரும்பிய இருவர் – தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
புலம்பெயர் தொழிலாளர் தினத்தை நினைவுகூர்ந்து, இந்த ஊடக சந்திப்பு நடத்தப்பட்டது.
