அரசியல்வாதிகளும் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும்: 76 வயது பீரிஸ் எம்.பியிடம் கூறிய அனுநாயக தேரர்

🕔 December 19, 2022

ரசியல்வாதிகளும் 60 வயதில் விருப்ப ஓய்வு பெற்று இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என கடம்பே ராஜோபவனாராமாதிபதி மற்றும் ராமன்ன நிகாயவின் அனுநாயகருமான கப்பிட்டியாகொட சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று (18) தேரரை பார்வையிடச் சென்ற போதே அவர் இதனைக் கூறினார்.

பெரும்பாலானவர்கள் தமக்குத்தாமே சேவை செய்வதற்காகவே பொது சேவையில் ஈடுபடுகின்றனர் என்றும் தேரர் தெரிவித்துள்ளார்.

அரச சேவையில் உள்ள வைத்தியர்கள், பொறியியலாளர்கள் மற்றும் ஏனைய தொழில் வல்லுநர்கள் 60 வயதில் ஓய்வு பெற்றால், அனைத்து அரசியல்வாதிகளுக்கும் இதே சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அனுநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.

“அனைத்து அரசு ஊழியர்களும் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று பிரதமர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்குக் காரணம், 60 வயதுக்குப் பிறகு, உடல், மன மற்றும் சுகாதார சிக்கல்கள் மற்றும் பிற பலவீனங்கள் மக்களுக்கு ஏற்படுகின்றன.

பிறகு எப்படி அரசியல்வாதிகள் 60 வயதுக்குப் பிறகும் தொடர்ந்து பணியாற்ற முடியும்?

அதே சட்டம் அவர்களுக்கும் பொருந்த வேண்டும். அவர்கள் இந்த சட்டத்தில் இருந்து தப்புவது பெரும் அநீதியாகவே பார்க்கிறோம்.

அரசு ஊழியர்களால் வேலை செய்ய முடியவில்லை என்றால், அரசியல்வாதிகள் எப்படி வேலை செய்ய முடியும்? இது நகைப்புக்குரியது. தங்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் காரணமாக பலர் நாடாளுமன்றத்தில் இருந்து ஓய்வு பெறுவதை நினைத்துக்கூட பார்ப்பதில்லை.

இந்த முறையை மாற்றி இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். 60 வயதைக் கடந்த கல்வியாளர்கள் அல்லது வேறு நபர்கள் இருந்தால், அவர்கள் தங்களுடைய சேவையை வழங்குவதற்காக, நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவை உருவாக்க வேண்டும்” என்றும் தேரர் மேலும் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸுக்கு தற்போது 76 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்