முன்னாள் தலைவர் கட்சியை திருடி அழித்தார்: சந்திரிக்கா பண்டாரநாயக்க வெளியிட்ட தகவல்

🕔 December 13, 2022

லகில் ஊழல் நிறைந்த முதல் 10 நாடுகளில் இலங்கையும் ஒன்று என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான தெளிவான பார்வை ஓர் அரசாங்கத்துக்கு இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

புதிய லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் – குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டை முன்னேற்ற இளைஞர்களின் தலைமை அவசியம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

“அரகலய தந்த செய்தியை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். அந்த இளைஞர் போராட்டம் நம் நாட்டில் முக்கியமானதும் மதிப்புமிக்கதுமான முன்னேற்றம் மிகுந்த ஒரு வரலாற்று நிகழ்வு.

புரட்சியை ஏற்படுத்திய இந்த நிகழ்வை இப்போது மக்கள் மனங்களிலிருந்து மறக்கடிக்க முயற்சிக்கின்றனர். இந்தப் போராட்டத்தின் செய்தி என்ன? 70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அனைத்து சக்திகளும் பொதுமக்களை ஏமாற்றிவிட்டனர்.

இன்று 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் நிராகரிக்கின்றனர். புதிய தலைமையும் புதிய தத்துவமும் வேண்டும். நாட்டை ஆளும் ஐக்கியப்பட்ட அரசியல் கலாசாரத்துடன் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு புதிய தலைமைத்துவம் தேவை. அவர்கள் ஒரு தீவிரமான மாற்றத்தை எதிர்பார்த்தனர்.

“நமது நாடு 2300 ஆண்டுகால வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இன்று எங்களிடம் எரிபொருள் இல்லை, உணவு இல்லை, மின்சாரம் இல்லை. அரசாங்கம் முற்றாக வீழ்ந்துவிட்டது. நல்ல கல்வி இல்லாமல் நாடு வளர்ச்சி அடையாது.

நாட்டில் எப்போதும் இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் மட்டுமே இருந்தன; ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுமாகும். இன்று ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. ரணிலின் கும்பலும் சஜித்தின் கும்பலும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முற்றாக அழிவுற்று, இன்று 06 துண்டுகளாக பிளவுபட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச கட்சியை அழித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்து, கட்சியை தமக்கே உரிய வழியில் கட்டியெழுப்ப வேண்டும் என்ற கனவு ராஜபக்ஷவுக்கு இருந்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் திருடவில்லை. முன்னாள் தலைவர் கட்சியை திருடி அழித்தார். அவர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் விருந்து பகிர்ந்து கொண்டனர். எஞ்சியிருந்த அனைத்தையும் சிறிசேன அழித்துவிட்டார்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்