அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்குள் போதைப் பொருள் வியாபாரம்: மாணவர்கள் சிக்கிய போதும், சம்பவத்தை மூடி மறைக்கிறது நிர்வாகம்

🕔 October 6, 2022

– அஹமட் –

ட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் போதைப் பொருள் விற்பனையில் மாணவர் ஒருவர் ஈடுபட்ட விவகாரத்தை பாடசாலையின் அதிபர் மற்றும் நிருவாகத்தினர் மூடி மறைத்துள்ளதாக அறிய முடிகிறது.

நேற்று முன்தினம் (04ஆம் திகதி) அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் – போதைப் பொருள் வைத்திருந்த மாணவர் ஒருவரையும், அதனைப் பெற்றுக்கொடுத்த மற்றொரு மாணவரையும் ஆசிரியர் ஒருவர் பிடித்துள்ளார். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, அதே பாடசாலையின் 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், குறித்த போதைப் பொருளை விற்பனை செய்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, போதைப் பொருளை வைத்திருந்தவரையும், அவருக்கு அதனை பெற்றுக் கொடுத்தவரையும் – குறித்த ஆசிரியர், ஒழுக்காற்று குழுவுக்குப் பொறுப்பான ஆசிரியரிடம் ஒப்படைத்தார். ஆயினும், இது தொடர்பில் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல், விவகாரம் மூடி மறைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கற்கும் மாணவர்களின் பெற்றோர் சிலர் – ‘புதிது’ செய்தித்தளத்தைத் தொடர்பு கொண்டு பேசியதை அடுத்து, இது தொடர்பில் ‘புதிது’ ஆராய்ந்தது. இதன்போது ஆதாரங்களுடன் பல்வேறு தகவல்கள் நமக்குக் கிடைத்தன.

நடந்தது என்ன?

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் – நேற்று முன்தினம் பாடசாலையினுள் போதைப் பொருள் வைத்திருந்த மாணவர் ஒருவரையும், அவருக்கு அதனை பெற்றுக் கொடுத்த மாணவர் ஒருவரையும் பிடித்தார்.

குறித்த போதைப் பொருள் – கஞ்சா என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதனை 800 ரூபா கொடுத்து – குறித்த மாணவர், சக மாணவர் ஒருவர் ஊடாக வாங்கியுள்ளார்.

அதே பாடசாலையில் 11ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவரிடம் இருந்தே, குறித்த போதைப் பொருளை பாடசாலையினுள் வைத்து தாம் பெற்றுக் கொண்டதாக, ஆசிரியரிடம் சிக்கிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, போதைப்பொருளை வாங்கிய இரண்டு மாணவர்களையும் குறித்த ஆசிரியர் – ஒழுக்காற்று குழுவுக்குப் பொறுப்பான ஆசிரியரிடம் ஒப்படைத்தார்.

இதேவேளை அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபர் அன்றைய தினம் பாடசாலைக்கு வருகை தரவில்லை எனக் கூறப்படுகிறது.

ஆயினும் பிற்கபல் 3.00 மணிக்குப் பின்னர் பாடசாலைக்கு அதிபர் வந்துள்ளார். இதனையடுத்து, நடந்த சம்பவங்களை மாணவர்களைப் பிடித்த ஆசிரியர் விவரமாகக் கூறியுள்ளார். ஆயினும் இது தொடர்பில் அதிபர் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரியவருகிறது.

அதிபர் மறுப்பு

இந்த நிலையில், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் மேற்குறிப்பிட்டது போன்ற சம்பவம் எதுவும் நடைபெற்றவில்லை என்றும், அவ்வாறு கூறப்படுவது வதந்தி எனவும் பாடசாலையின் அதிபர் ஏ.சி.எம். ஹரீஸ் கூறுகின்றார்.

ஆனால், நடந்த விடயத்தை ஹரீஸ் மறைக்கின்றார் என்பது, ‘புதிது’ செய்தித்தளத்துக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் உறுதியாகிறது.

“இது தொாடர்பாக உங்களிடம் யாராவது கேட்டால், பாடசாலையில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்று கூறுங்கள்” என, மேற்படி விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் – அதிபர் ஹரீஸ் கூறியமைக்கான ஆதாரம் ‘புதிது’ செய்தித்தளத்திடம் உள்ளது.

குறித்த மாணவர்களுக்கு நேற்று முன்தினம் – பொதி செய்யப்பட்ட போதைப் பொருளை விற்பனை செய்த மாணவரிடம் சுமார் 15 ஆயிரம் ரூபா பெறுமதியான பொதிகள் (ஒரு பொதி 800 ரூபா) இருந்ததாக கூறப்படுகிறது.

அப்படியென்றால், குறித்த மாணவன் எவ்வளவு காலமாக பாடசாலைக்குள் வைத்து இவ்வாறு போதைப் பொருளை விற்பனை செய்து வந்துள்ளார் என்பது இங்கு ஆராயப்பட வேண்டிய விடயமாக உள்ளது.

இதனை வாங்கி – யாரெல்லாம் பயன்படுத்தி வந்துள்ளார்கள் என்பது பற்றிய விவரங்களும் அறியப்பட வேண்டும்.

ஆனால், இவை எதுபற்றிய சொரணைகளுமின்றி போதைப்பொருள் விற்பனை செய்த மாணவனை – தேசிய பாடசாலை அதிபர் – தப்பிக்க விட்டமைக்கான காரணம் என்ன?

போதைப் பொருள் எங்கே?

இது இவ்வாறிருக்க சட்டவிரோதமான போதைப் பொருளொன்று நம்மிடம் கிடைத்தால், அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு நாம் அறிவிக்க வேண்டும். ஆனால், இதனையும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை நிர்வாகம் செய்யவில்லை.

அப்படியென்றால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் எங்கே? அது யார் வசமுள்ளது என்கிற விடயங்களும் தேடியறியப்பட வேண்டும்.

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்களிடையே போதைப் பொருள் பாவனை உள்ளதாக பல்வேறு மட்டங்களிலும் குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில், தற்போது பாடசாலைக்குள்ளேயே மாணவர் ஒருவர் – சக மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மறுபுறமாக, இது விடயமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிபரே இதனை மூடி மறைப்பதும், போதை விற்பனை செய்த மாணவனை தப்பிக்க விட்டதும், மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

எனவே, இந்த விடயம் – அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் கவனத்துக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட வேண்டும். இதனுடன் தொடர்புபட்ட மாணவர்கள் குறிப்பாக போதைப் பொருளை விற்பனை செய்த மாணவரை – பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு முன்னர் அவரை பாடசாலையிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றுவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுதல் அவசியமாகும்.

அதேவேளை, இந்த விடயத்தை மூடி மறைத்த பாடசாலையின் அதிபர், ஒருக்காற்று பிரிவுக்குப் பொறுப்பான ஆசிரியர் உள்ளிட்டவர்கள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

தொடர்பான கட்டுரை: அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை; வெட்கப்படும் பரீட்சை முடிவும் ஆண் பிள்ளைகளின் எதிர்காலமும்: சீரழிவுக்கு யார் பொறுப்பு?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்