ரஞ்சன் 07 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது: ரணில் வழங்கிய முழுமையற்ற மன்னிப்பு

🕔 August 26, 2022

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமன்னிப்பு வழங்கியுள்ள போதிலும், இதன் மூலம் அவருக்கு அரசியல் உரிமைகள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

“ரஞ்சன் ராமநாயக்க அரசியலமைப்பின் 34 (1) சரத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மன்னிக்கப்பட்டுள்ளார். இது நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு. அரசியல் உரிமைகளுடன் முழுமையான ஜனாதிபதி மன்னிப்பைப் பெறுவதற்கு அரசியலமைப்பின் 34 (2)ஆவது பிரிவின் கீழ் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்” என்று நீதி அமைச்சின் அதிகாரி ரகித ராஜபக்ச நியுஸ் வயர் ஆங்கில ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் ரஞ்சன் ராமநாயக்கவுடன் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச; “அரசியல் உரிமைகளுடன் கூடிய முழுமையான ஜனாதிபதி மன்னிப்பை ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகளை உள்ளடக்கிய முழுமையான ஜனாதிபதி மன்னிப்பை ஜனாதிபதியும் அரசாங்கமும் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வேண்டியுள்ளார்.

இலங்கைச் சட்டத்தின்படி, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவிக்கும் நபர், ஜனாதிபதியின் முழுமையான மன்னிப்பு வழங்கப்படாவிட்டால், 07 ஆண்டுகளுக்கு அரசியல் மற்றும் குடிமை உரிமைகளை இழக்க நேரிடும் என ‘நியுஸ் வயர்’ தெரிவிக்கின்றது.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கடந்த வருடம் ஜனவரி மாதம் 12ஆம் திகதி, உச்ச நீதிமன்றினால் 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் சிறையில் இருந்தபோது அவர்களுக்கு பூரண ஜனாதிபதி பொது மன்னிப்பு கிடைத்திருந்தது.

ரஞ்சன் ராமநாயக்க போன்று நீதிமன்றை அவமதித்த குற்றத்துக்காக சிறைத்தண்டனை பெற்ற ஞானசார தேரருக்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – முழுமையான மன்னிப்பை வழங்கினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்