தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிலிருந்து விலகத் தயார்: அனுர குமார திஸாநாயக்க தெரிவிப்பு

எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல் இல்லாத இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை – ஜனாதிபதி மற்றும் பிரதமராக நியமித்தால் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிருந்து வாபஸ் பெறத் தயார் என, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல்களின்றி ஜனாதிபதி மற்றும் பிரதமரை நியமிப்பது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பல சுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக, காலி முகத்திடல் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு பேசும் போது அவர் கூறினார்.

சில அரசியல் கட்சிகள் – இந்த விடயத்தில் ஒருமித்த கருத்துக்கு வர ஒப்புக்கொண்டாலும், இப்போது அவர்களின் நிலைப்பாடு மாறிவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

“எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல்களின்றி ஒரு ஜனாதிபதியையும் பிரதமரையும் நியமித்து, குறுகிய காலத்துக்கு சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்கி – தேர்தலுக்கு செல்வோம் என்று நாங்கள் அவர்களிடம் முன்மொழிந்தோம். நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு மேற்பார்வையிட அல்லது மத்தியஸ்தம் செய்வதற்கு காலி முகத்திடல போராட்டக்காரர்களை உள்ளடக்கிய ஒரு சபையை நியமிக்கவும் நாங்கள் முன்மொழிந்தோம்” என்றும் அவர் இதன்போது கூறினார்.

அவ்வாறான உடன்பாட்டுக்கு வருவதற்கான முயற்சியை தாங்கள் முற்றாக கைவிடவில்லை எனத் தெரிவித்த அவர், அதுபோன்ற இணக்கப்பாடு எட்டப்பட்டால், இறுதி நேரத்திலும் வேட்புமனுவை வாபஸ் பெறத் தயார் எனவும் அனுர குமார மேலும் குறிப்பிட்டார்.

ரணில் விக்ரமசிங்க – நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முயற்சித்து வருவதாகவும் அவரின் நகர்வுகள் தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.