பொலிஸ் வீதி காவலரணுக்கு தீ வைப்பு: பொதுமக்கள் இருவர் மீது துப்பாக்கிச் சூடு: பாலமுனையில் பதட்டம்

🕔 May 6, 2022

– முன்ஸிப் அஹமட் –

ம்பாறை மாவட்டம் – பாலமுனை பிரதேசத்தில் பொலிஸாரின் வீதித் தடைக் காவலரண் ஒன்றினை பொதுமக்கள் தீ வைத்து எரித்துள்ளதோடு, அங்கிருந்த பொலிஸார் மற்றும் ஊர் காவல் படையினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை (05) இரவு இச்சம்பவம் நடந்துள்ளது.

வீதித் தடைக் காவலரணில் இருந்த ஊர் காவல் படை உத்தியோகத்தர் ஒருவர் – பொதுமகன் ஒருவரை மிகவும் மோசமாகத் தாக்கியதாகவும் அதனையடுத்து அங்கிருந்த பொலிஸ் மற்றும் ஊர்காவல் படை உத்தியோகத்தர்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதோடு, வீதித் தடைக் காவலரண் மீது தீ வைத்ததாகவும் சம்பவ இடத்தில் இருந்தோர் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து அந்த இடத்துக்கு வந்திருந்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுறது.

இதன்போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் இருவர் காயமடைந்தனர். 40 வயதுடைய இமாமுதீன் என்பவரும், 31 வயதுடைய பாஹிர் என்பவரும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்திய அத்தியட்சகர் ஆஷாத் எம். ஹனீபா தெரிவித்தார்.

இதேவேளை இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸார் 06 பேரும், ஊர் காவல் படையினர் 03 பேரும் சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வைத்திய அத்தியட்சகர் கூறினார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பொதுமக்களில் இமாமுத்தீன் என்பவருக்கு கையிலும், பாஹிர் என்பவருக்கு வயிற்றிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சம்பவத்தின்போது தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் ஒருவரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு ஆரம்பித்த இந்த சம்பவம் – இன்று அதிகாலை 1.30 மணி வரையிலும் நீடித்திருந்தது.

சம்பவம் நடைபெற்ற பின்னர், உரிய இடத்துக்கு கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் வருகை தந்து – நிலைமை குறித்து ஆராய்ந்தனர்.

தீ வைக்கப்பட்ட காவலரண்
ஊர்காவல் படை உத்தியோகத்தரால் தாக்கப்பட்ட நபரின் உடலில் இருந்து வெளியேறிய ரத்தமும். அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும். மறுபுறமாக தாக்குதலுக்குள்ளான ஊர்காவல் படை உத்தியோகத்தர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்