பிரதி சபாநாயகராக மீண்டும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு

🕔 May 5, 2022

பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே பிரதி சபாநாயகராக செயற்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய – பதவி விலகியதை அடுத்தே இந்த புதிய தெரிவு இடம்பெற்றது.

அரசாங்க கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஞ்சித் சியம்லாப்பிட்டியவின் பெயரும் எதிர்கட்சியின் சார்பில் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் பெயரும் புதிய பிரதி சபாநாயகர் பதவிக்காக முன்மொழியப்பட்டன.

இதனையடுத்து ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவாகவே புதிய பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய 148 வாக்குகளையும், இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் 65 வாக்குகளையும் பெற்றனர்.

ஏற்கனவே அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா யோசனை எதிர்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக வாககெடுப்பின்போது ரகசியம் பாதுகாக்கப்படவேண்டும் என்ற அடிப்படையில், வாக்குச்சீட்டில் வாக்களிக்கும் உறுப்பினர் கையொப்பம் இடவேண்டும் எனறு சபாநாயகர் வலியுறுத்தினார்.

எனினும் இதனை எதிர்கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. அரசாங்க கட்சியில் உள்ளவர்கள் பலர் தமது பிரதிநிதிக்கு வாக்களிக்கவிருப்பதால், கையொப்பம் இடுதல் நிறுத்தப்படவேண்டும் என்றும் அதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு இருப்பதாகவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார். எனினும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின்படி இந்த முறையை மாற்ற வாய்ப்பில்லை என்று சபாநாயகர் குறிப்பிட்டார்.

அதேநேரம் வாக்கு சீட்டுக்களின் ரகசியம் நாடாளுமன்ற செயலாளரால் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டு அவர்களுக்கு வாக்கு சீட்டுக்கள் வழங்கப்பட்டன. இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வாக்குகளை வாக்கு பெட்டியில் செலுத்தினர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்