சர்வ கட்சி மாநாட்டில் கப்ராலை ‘போட்டுத் தாக்கிய’ ரணில்: மன்னிப்புக் கோரினார் ஜனாதிபதி

🕔 March 23, 2022

லங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இன்று (23) கூடிய சர்வகட்சி மாநாட்டில் அரசியல் பேசியதாக, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடியுள்ளார்.

மாநாட்டில் உரையாற்றிய கப்ரால், இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து அரசியல் கட்சிகளுக்கு விளக்கமளித்ததுடன், தற்போதைய நிலைமைக்கு முன்னாள் அரசாங்கம் மீது பழி சுமத்தியிருந்தார்.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கப்ராலின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, மாநாட்டில் அரசியல் பேசியதற்காக கப்ராலை கடுமையாக சாடினார்.

பொருளாதார நெருக்கடி குறித்து ஆலோசிக்கவே இந்த மாநாடு கூட்டப்பட்டதாக கூறியுள்ள முன்னாள் பிரதமர், இது குற்றஞ்சாட்டி விளையாடும் இடம் அல்ல என்றும் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், முன்னாள் அரசாங்கத்தின் தவறுகளினால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என, தனது உரையை ஆரம்பித்துள்ளமை வருத்தமளிப்பதாகவும் இதன்போது ரணில் குறிப்பிட்டார்.

“முன்னாள் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் அரசாங்கத்துக்குத் தெரியும். அரசியல் வேறுபாடுகளுக்காக மீண்டும் ஒருமுறை சண்டையிட்டு ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதற்காக நாங்கள் இன்று இங்கு வரவில்லை. நாங்கள் அரசியல் பேச்சுக்காக இங்கு வரவில்லை. இதைத் தொடர்ந்தால் விஜய மன்னன் இலங்கைக்கு வருவது பற்றிய விவாதத்தில் முடிந்துவிடும். அவர் இலங்கைக்கு வரவில்லையென்றால் எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது எனத் தோன்றுகிறது” ஐ.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

மன்னிப்புக் கோரினார் ஜனாதிபதி

ரணில் விக்ரமசிங்கவின் கருத்துக்கு இதன்போது பதிலளித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ; “மத்திய வங்கி ஆளுநரின் கருத்துக்கள் உங்களைக் காயப்படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

பின்பற்ற வேண்டிய செயற்பாடுகளை மாத்திரமே மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியதாகவும், அதனால்தான் முன்னாள் அரசாங்கம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டதாகவும் ஜனாதிபதி இதன்போது மேலும் கூறினார்.

எவருக்கும் எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்காக இந்த மாநாடு நடத்தப்படவில்லை என கூறிய ஜனாதிபதி, தொடரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக, ஏனைய கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காகவே இந்த மாநாடு கூட்டப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்