எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் போது, சபை வாகனங்களை சொந்தத் தேவைக்காக கல்முனை மேயர் பயன்படுத்துகிறார்: உறுப்பினர் மனாப் குற்றச்சாட்டு

🕔 March 22, 2022

– எஸ். அஷ்ரப்கான் –

நாட்டில் பாரியளவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், கல்முனை மாநகர சபை வாகனங்களை அதன் மேயர் தனது சொந்த தேவைகளுக்கு நீண்டதூரம் பயணிக்கப் பயன்படுத்திக்கொண்டு, திண்மக்கழிவகற்றலை தள்ளுவண்டிகள் மூலம் செய்யப்போவதாக அறிக்கைகள் விடுகிறார் என, கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப் குற்றம் சுமத்தினார்.

அவரது அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“ஊழல்கள் நிறைந்த, அதிகார துஸ்பிரயோகமிக்க சபையாக கல்முனை மாநகரசபை திகழ்கிறது.

கல்முனை மாநகர சபை உத்தியோகத்தத்தார்கள், ஊழியர்கள் மன்றும் சபையோரை மதிக்காமல் கல்முனை மாநகர சபை முதல்வர் நடந்துவருவதுடன் அதிகார மோசடிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார்.

சபை அங்கீகாரம் இல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை ஆட்சேர்த்தமை, சபை அனுமதியின்றி குப்பைவரியை அறிமுகம் செய்ததுடன் சோலை வரி, விளம்பர வரி என வரிக்குமேல் வரிவிதித்து மக்களை துன்புறுத்தியமை, வீணான செலவீனங்களை மேற்கொள்கின்றமை, மாநகர சொத்துக்களை சுயதேவைக்கு பயன்படுத்துகின்றமை, இதனைத் தட்டிக்கேட்கும் உயரதிகாரிகளை மலினப்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்தும் ஈடுபட்டு மக்களின் வரிப்பணத்தை மேயர் வீணடித்துக் கொண்டிருக்கிறார்.

முஸ்லிம் அரசியல் அடையாளமாக திகழ்பவர்களில் ஒருவரான எம்.எஸ். காரியப்பரின் பேரன் கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றுகிறார். அவர் தனது பாட்டனை போன்றே மக்கள் நலன் மீது அதிக அக்கறைகொண்டவராக தனது கடமைகளில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அவர் தனது கடமை எல்லைக்கு அப்பாலும் சென்று மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். மக்களினதும், மாநகர சுகாதார ஊழியர்களினதும் தேவையறிந்து சேவை செய்யும் டொக்டர் அர்சத் காரியப்பர் – மேயரின் ஊழல்களுக்கு சோரம்போகாமல் இருப்பதனால், அவரைக் கூட அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் இப்போது இடம்பெற ஆரம்பித்துள்ளது.

54 ஆயிரமளவில் வீடுகளை கொண்ட கல்முனை மாநகரத்தில், சிறிய 20 தள்ளுவண்டிகளை கொண்டு குப்பை அள்ளுவது சாத்தியமாகுமா? சில வீடுகளின் குப்பைகளை கூட அகற்றமுடியாத தள்ளுவண்டிகள் மூலமான கழிவகற்றல் கல்முனைக்கு சாத்தியமில்லை.

கல்முனை பஸ்நிலைய புனரமைப்பில் முறைகேடு, நிதிக்குழு தீர்மானமில்லாமல் வாங்கப்பட்ட மின்குமிழ் கொள்வனவில் பாரிய ஊழல், பொதுச் சொத்துக்களின் பாவனையில் முறைகேடு, அவரது வாகனத்துக்கும் எவ்வித அனுமதியுமின்றி எரிபொருள் நிரப்புதல், கல்முனை பிரதான சந்தை கட்டிடத்தொகுதி குத்தகையில் முறைகேடு, கோவிட் 19 கட்டுப்பாட்டுக்கென ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் மோசடி செய்தமை, அதிகாரிகளுடனான முரண்பாடுகள், ஒழுங்கான திட்டமிடல்கள் இல்லாத வேலைத்திட்டங்கள், உயர் அதிகாரிகளின் பணியில் தலையீடுகள், அரச அதிகாரிகளின் பணியில் தடையை ஏற்படுத்தும் முன்னெடுப்புக்கள், உயரதிகாரிகளை நடத்துவதில் உள்ள பிரச்சினைகள், மாநகர அபிவிருத்தியில் பாராமுகம் என, கல்முனைக்கு முதல்வரினாலும், மாநகர நிர்வாகத்தினால் செய்யப்படும் அநீதிகள் தொடர்பில் பல தடவை அரச மேல்மட்டங்களுக்கும், கணக்காய்வு திணைக்களம் மற்றும் லஞ்ச ஊழல் ஆணைக்குழு, மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் போன்ற பலருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வரினால் மோசமமான ஆட்சி புரியப்படும் கல்முனை மாநகர சபையில், நிறைய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கிறன. இதனால் மக்களின் வரிப்பணம் பல கோடி ரூபாய்கள் வீணடிக்கப்படுகிறது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்