பதுக்கல் கடைகள் சுற்றி வளைப்பு; விலைகளில் மாற்றம் செய்யப்பட்டிருந்த பால்மா பெட்டிகள் அகப்பட்டன: கல்முனை, சாய்ந்தமருதில் அதிகாரிகள் அதிரடி

🕔 March 21, 2022

ல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் பால்மா பெட்டிகளை பதுக்கி வைத்திருந்த கடைகளை நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட அலுவலக அதிகாரிகள் சுற்றி வளைத்து, பதுக்கப்பட்ட பால்மா பொதிகளை இன்று (21) கைப்பற்றினர்.

கிடைக்கப்பெற்ற ரகசிய முறைப்பாட்டையடுத்து, அம்பாரை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி சாலிந்த பண்டார நவரத்ன தலைமையில் இந்த சுற்றி வளைப்பு நடைபெற்றது.

இந்த நடவடிக்கையின் போது மூன்றுக்கும் மேற்பட்ட வியாபார நிலையங்கள் முற்றுகையிடப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டன.

நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஏற்பட்டிருக்கும் விலையேற்றத்தை அடுத்து, நீண்ட நாட்களாக பதுக்கி வைத்திருந்து சந்தர்ப்ப வியாபாரத்தை மேற்கொண்டு வரும் – கடை உரிமையாளர்கள், அதிக லாபம் ஈட்டும் நோக்கில் மறைத்து வைத்திருந்த ஒரு தொகை அங்கர் மற்றும் ரத்தி ஆகிய பால்மா பெட்டிகளை அதிகாரிகள் இதன்போது கண்டு பிடித்தனர்.

இந்த பால்மா பெட்களின் பழைய விலைகள் மாற்றம் செய்யப்பட்டு, புதிய விலைகளை அச்சிட்டு விற்பனை செய்ய தயாரான நிலையில், இவை கைப்பற்றப்பட்டன.

கடைகள் ஒவ்வொன்றிலும் நூற்றுக்கணக்கான பால்மா பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்; பாவனையாளர்களாகிய தமக்கு கடை உரிமையாளர்கள் பால்மா விற்பனை செய்ய மறுத்ததாகவும், சில வேளைகளில் அங்கர் அல்லது ரத்தி பால்மா வகையினை வாங்க வேண்டுமாயின் குறிப்பிட்ட உற்பத்தி பொருட்களின் ஏனைய பொருட்களையும் அதாவது யோகட், பிஸ்கட் , சமபோஷ, தேயிலைதத் தூள் போன்ற பிற பொருட்களையும் வாங்க வேண்டும் என்ற நிபந்தனையையும் விதிப்பதாகவும் முறையிட்டனர்.

1345 ரூபா பழைய விலை குறிப்பிடப்பட்டிருந்த 01 கிலோ அங்கர் பால்மாவினை புதிய விலை 1950 க்கு விற்பனை செய்ததாகவும், 540 ரூபா பெறுமதியான 400 கிராம் பால்மா 690, 700 ரூபாவுக்கு விற்பனை செய்யபட்டதாகவும் கிடைக்க பெற்ற முறைப்பாட்டயடுத்தே இந்தச் சுற்றி வளைப்பு இடம்பெற்றது.

கைப்பற்ற பட்ட பால்மாவினை பொதுமக்களுக்கு – குறிக்கப்பட்ட விலைக்கு பகிர்ந்தளிக்குமாறு அங்கிருந்த மக்கள் வேண்டிக்கொண்டதையடுத்து, நுகர்வோர் அதிகாரசபையின் மாவட்ட பொறுப்பதிகாரி புலணாய்வு உத்தியோகத்தர் சாலிந்த பண்டார நவரத்ன, அவற்றினை மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.

இதேவேளை பொருட்களைப் பதுக்கியமை, கூடிய விலைக்கு விற்பனை செய்தமை மற்றும் நிபந்தனை அடிப்படையில் வியாபாரம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், எதிர்வரும் ஓரிரு தினங்களுக்குள் குறிப்பிட்ட கடைக்காரர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரவிருப்தாகவும் மாவட்ட பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்