தலைப்புச் செய்திகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம்; அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையினால், பொதுமக்களுக்கு விநியோகம்

– றிசாத் ஏ காதர் –

நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கும் வகையிலான ஆயுர்வேத பானம், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையினால், இன்றைய தினம் பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டது.

வைத்தியசாலையின் சமூக நலன் பிரிவு ஏற்பாடு செய்த இந்த ‘உடற்தேற்றி பானம்’ வழங்கும் நிகழ்வு, இன்று வியாழக்கிழமை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதான நுழைவாயிலில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.பீ.எம். றஜீஸ் இந்த நிகழ்வை தலைமை தாங்கி ஆரம்பித்து வைத்தார்.

ஊரடங்குச் சட்டம் இன்றைய தினம் தளர்த்தப்பட்டமையை அடுத்து, அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் சந்தை நடவடிக்கை இடம்பெற்றது. இதனால் அங்கு வருகை தந்த பெருமளவு மக்கள் இந்தப் பானத்தைப் பெற்று அருந்தினர்.

கொவிட் 19 தொற்று நோயால் பாதிக்கப்படாமலிருக்கும் பொருட்டு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வகையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இந்தப் பானத்தினை, பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் பெற்று அருந்தினர்.

கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளின் இணைப்பாளர் டொக்டர் ஏ.எம். நபீல், திருக்கோவில் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் ஐ.எல். அப்துல் ஹை மற்றும் சமூக நலன் பிரிவு வைத்தியர் எம்.ரீ. அமீரா ஆகியோர், இந்த சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வின் பின்னர் அட்டாளைச்சேனை பிரதே செயலகம், பிரதேச சபை மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் உத்தியோகத்தர்களுக்கும் குறித்த பானத்தைத் தயாரிப்பதற்கான மூலிகைப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைவாகவும், ஆயுர்வேத வைத்தியசாலைகளின் இணைப்பாளரின் வழிகாட்டுதலுக்கு அமைவாகவும் மேற்படி பானம் வழங்கும் சேவை நடத்தப்பட்டது.